605.

     பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
          புண்ணியமே செய்துநினைப் போற்றுகின்றார்.
     நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
          நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
     செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
          சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
     ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
          அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

உரை:

     ஐயனே, எனக்கு அப்பனே, என் அரசனே, பொய்படுவதில்லாத நின்னுடைய மெய்யடியார் எல்லாரும் நல்ல புண்ணியம் செய்ததன் விளைவாக நின்னைப் போற்றி வழிபடுகின்றார்களாக, தீவினையால் மெலிந்து வருந்துகிற மனமுடையனாதலால் பாவியாகிய நான் ஒருவன் மாத்திரம் இவ்வுலகில் நாயின் தன்மைக்கொண்டு தீமைகளைச் செய்து வாழ்கிறேனேயன்றி, நின்னைச் சிறிதுபோதும் நினைப்பதில்லேனாயும் நினைக்கும் வகையை எண்ணாதவனாயும் கிடந்து வீணே வருந்துகிறேன். ஐயோ நான் என்ன செய்வேன்! எ.று.

     பொய்யை அறவே கடிந்து மெய்ம்மை மேற்கொண்டு ஒழுகுபவராயினும், முன்னமே நல்வினை செய்தார்க்கன்றி, சிவபெருமானது உண்மை யுணர்ந்து வழிபட்டொழுகும் செயல் உண்டாகாதாகலின், “பொய்யாத நின்னடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினைப் போற்றுகின்றார்” என்று புகல்கின்றார். திருவலஞ்சுழிப் பெருமானை வணங்கி வழிபட்டுத் திருஞானசம்பந்தர் தமக்கு வழிபடும் இப் பேறு முன்பு செய்த புண்ணியப் பயன் என்பாராய், “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து, முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடைத். . . . திருவலஞ்சுழி வாழனை வாயாரப் பண்ணி யாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே” என்பது காண்க. நல்வினை இல்லாமையால் வேறு வினைகளைச் செய்து மனம் நொந்து வருந்துகின்றமை விளங்க, “நையா நின்றுலைகின்ற மனத்தால்” என்றும் அதனால் பாவவினைகள் பல செய்து பாவியானமை புலப்பட, “இங்கே நான் ஒருவன் பெரும்பாவி” எனவும், அதனால் வாழ்க்கையில் கிடந்து துன்புறுகின்றேன் என்பார், “நாயேன் தீமை செய்யா நின்றுழைக்கின்றேன்” எனவும் இயம்புகின்றார். துன்பங்கட்கிடையே மனம் துயர்ப்படுமிடத்து இறைவன்பால் சிந்தை செல்லாமையின் “சிறிதும் நின்னைச் சிந்தியேன்” என்றும், சிந்திப்பதற்குரிய நெறி தானும் அந்நிலையில் புலப்படாமையின், “வந்திக்கும் திறமும் நாடேன்” என்றும், இவ்வாற்றால் மனம் ஓய்வின்றித் திரிந்தலைவ தல்லது வேறு செயல்வகை தெளியாமையின், “வீணில் அலைகின்றேன் என் செய்கேன்” என்றும் சொல்லி முறையிடுகின்றார். “உன்னை வந்திப்பதோர் நெறியறியேன் நின்னையே யறியேன் நின்னையே யறியும் அறிவறியேன்” (அடைக்) என்று மணிவாசகப்பெருமான் வருந்தி யுரைப்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

     இதனால், செய்த தீவினையால் மனவொருமை யின்றிச் சிந்திக்கும் நெறியிழந்து அலமரும் முறை தெரிவித்தவாறாம்.

     (5)