606. தெருளுடையார் நின் அன்பர் எல்லாம் நின்றாள்
சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உரை: எல்லாம் வல்ல திருவருளை யுடையவனே, எல்லாரையும் ஆட்கொண்டருளும் பெருமானே, எல்லாவற்றையும் உடையவனே, தெளிந்த சிந்தையும் அன்பும் உடையவர் பலரும் நின்னுடைய திருவடியை மனத்திற்கொண்டு பேரின்பம் நிறைந்து மகிழ்கின்றாரகள்; மருட்சி மிக்க பாவியாகிய நான் ஒருவன்தான் வஞ்ச நினைவுகளால் உள்ளமும் உடம்பும் இளைத்து மயங்கி, அறிவு இருண்டு ஏரிற் பூட்டிய எருதுபோல இவ்வுலகில் இல்வாழ்க்கையிற் கட்டுண்டு உழப்பி வீணே அலைந்து வருந்துகிறேன். ஐயோ நான் என்ன செய்வேன்! எ.று.
எல்லா உலகுயிர்களையும் ஆண்டருள வல்லது இறைவன் திருவருளாதலின் “எல்லாம் வல்ல அருளுடையாய்” என்றும், எல்லா வுயிர்கட்கும் உடல் கருவி முதலியவற்றைப் படைத்தளித்து உலகில் வாழச் செய்வது பற்றி “ஆளுடையாய்” என்றும், உயிர்கட்கு வேண்டிய பொருள்வகை அத்தனையும் படைத்தலால் அவற்றைத் தனக்கு உடைமையாகவும், தான் அவற்றிற்கு உடையானாகவும் இயைபுறுவது பற்றி “உடையாய்” என்றும் உரைக்கின்றார். “அருளே யுலகெல்லாம் ஆள்விப்பது” (திருவந்) எனக் காரைக்காலம்மையார் கூறுவது காண்க. தெளிவுடையோர் சிந்தனையில் இறைவன் தேனூற நிற்கின்றானாகலின், “தெருளுடையார் நின்னன்பர் எல்லாம் நின்றாள் சிந்தையில்வைத்தானந்தம் தேக்குகின்றார்” என உரைக்கின்றார். தேக்குதல் - தேங்கி நிற்க வைத்தல். மருள் - மருட்கை. மருட்சியால் தீயவற்றின் தீமையுணராது நல்லன என நினைந்து செய்து பாவவினைக்கு ஆளானமை புலப்பட “மருளுடையேன் நானொருவன் பாவி” எனவும், மருட்சி தன்கண் இருப்பதைக் காட்டாமல் வினையின்கண் செலுத்தி வருத்தம் உறுவித்தலின் “வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன்” எனவும் கூறுகின்றார். மன மருட்சியால் அறிவும் இருள்படுதலின் “இருளுடையேன்” என்கின்றார். மனை வாழ்வில் செய்ததே செய்து, உண்டதே உண்டு, உழுத சால் வழியே ஓடும் எருதுபோல வாழக்கை இயல்வது பற்றி “ஏர் பூட்டும் பகடு போல் இங்கு இல்உழப்பில் உழைக்கின்றேன்” என்றுரைக்கின்றார். “உழுத சால் வழியே உழுவான்பொருட்டு இழுதை நெஞ்சம் இதுஎன் படுகின்றதே” (தனி) என்று திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. இச் செயல்களால் உறுதிப் பயன் ஒன்றும் காணாமையின் “வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ” என்று வருந்துகிறார்.
இதனால், வாழ்வில் செய்வதே செய்து உண்பதே உண்டு உழைத்திளைத்த வருத்தம் தெரிவித்தவாறு. (6)
|