607. வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
செயல்விளக்கம் மனத்தாலே திகைத்தேன் சைவ
சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உரை: அரிய அமுதமாகியவனே, மூன்றாகிய கண்களையுடைய அரசனே, அன்புடையவர்களாகிய நின்னுடைய அடியார்கள் எல்லாரும் நின்னை அன்பால் வாழ்த்துவதும் தலைகுளிர வணங்குவதும் செய்கின்றார்களாக, மனத்திட்பமில்லாத பாவியாகிய நானொருவன் வஞ்சம் பொருந்திய செயல்களை விளைவிக்கும் மனத்தினால் மயக்கமுற்றுச் சைவ ஞானமும் ஒழுக்கமுமின்றி மனவமைதியும் இரக்கப்பண்பும் தகைமையும் குன்றி, வீணாக அலைந்து வருந்துகிறேன். ஐயோ என்ன செய்வேன்! எ.று.
எத்துணைத் தேவர்கள் எத்துணைக் காலம் எல்லாக் கடல்களையும் சேரக்கூட்டி எல்லா மலைகளையும் சேர மத்தாக்கி எல்லாப் பாம்புகளையும் கயிறாக்கிக் கடைந்தாலும் பெறுதற்கரிய அமுதம் என்றற்கு “ஆரமுதே” என்கின்றார். வாரம் - அன்பு. “வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்” (சீவக) என்று திருத்தக்கதேவர் வழங்குவது காண்க. சிவன்பால் உளதாகிய பேரன்பினால் பிற தேவர்களை மறந்தும் தொழாத மெய்யடியார்களை, “வாரமுளார் நின்னடியார் எல்லாம்” எனவும், அவர்கள் வாயால் வாழ்த்தி அன்பால் தலை குனிந்து வணங்குகின்றார்கள் எனவும் உரைக்கின்றார். “வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்” (ஓண) என்று நம்பியாரூரர் சிறப்பிப்பது காண்க. தீரம் - மனத்திட்பம்.தீரமில்லாதவர் மேற்கொண்ட வினையை இடை முறித்துப் பாவ வினைகள் செய்தற்கு அஞ்சாராகலின், “தீரமிலேன் நானொருவன் பாவி” என்று சொல்லுகிறார். மனத்தின்கண் திட்பம் இல்வழி மெலிவுற்று வஞ்சனையும் பொய்யும் பிறவுமாகிய தீய செயல்கட்கு இடமாதலின் “வஞ்சச் செயல் விளைவிக்கும் மனத்தாலே திகைத்தேன்” என்று சொல்லுகின்றார். திகைத்தல் - மயங்குதல். சைவ சாரம் - சைவ நூலகளின் பிழி பொருளாகிய சிவஞானம். ஞானமில்லாதார்க்கு ஒழுக்கம் நிறைபெறாதாகலின் “ஆசார மில்லேன்” என அறிவிக்கின்றார். ஞானமும் ஒழுக்கமும் இல்லார்க்கு மனத்தின்கண் அமைதி தோன்றாதாதலால் “சித்த சாந்தமிலேன்” எனவும், அதனால் எவ்வுயிர்க்கும் பேதங் காணாது அன்பு செய்யும் எண்ணம் உண்டாகாதாகலின் “இரக்கமிலேன்” எனவும், அதனால் சொல்லிலும் செயலிலும் நேர்மை உண்டாகாமை பற்றி “தகவும் இல்லேன்” எனவும் இயம்புகின்றார். இவ்வாற்றால் நாளும் வீண்பொழுது போக்கி வருந்துவதல்லது செயல் வேறில்லாமையால் “வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ” என விண்ணப்பிக்கின்றார்.
இதனால், ஞானம் ஒழுக்கம் முதலியன இல்லாத சிறுமை எடுத்து விளம்பியவாறு காணலாம். (7)
|