609. உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
ஒன்றிமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
இம்பர்வினை யுடையேநான் ஒருவன் பாவி
எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
உரை: அம்பலத்தில் ஆடல் புரியும் அருளரசே, மேலுலகத்தார்க்கும் பெறற்கரிதாகும் உன் திருவடியை யன்றி வேறு எதனையும் அறிவதில்லாத மெய்யன்பர் எல்லாரும் உன்னை அடைந்தார்களாக; இவ்வுலகத்துக்குரிய செயல்களைச் செய்து திரியும் பாவியாகிய நான் ஒருவன்தான் எப்பொழுதும் எவ்விடத்தும் எள்ளத்தனையும் உன்னை நினைத்திலேன், புதுமணம் கமழும் பூவணிந்த கூந்தலையுடைய இள மகளிர் தரும் காம மயக்க மொன்றையே எண்ணுகிற மனமுடைய யான் நாடோறும் இடைவிடாத உழைப்பால் இளைத்த மாடுபோல உள்ளம்சோர்ந்து வாழ்க்கைத் துன்பத்தால் வருந்தி அலைகின்றேன். ஐயோ நான் என்ன செய்வேன்! எ.று.
தில்லையம்பலத்தில் ஆடற்கலைக்கு அருளரசாய் விளங்குதல் பற்றிச் சிவபெருமானை “அம்பலத்தெம் மரசே” என்று புகல்கின்றார். இறைவன் பால் உண்மையன்பு செலுத்தி, அவனது அருட்பேறு பெற்ற பெருமக்கள் இந்திரன் முதலிய தேவர்களும் பெற்றறியாத சிவபதம் ஒன்றையே பெறுகின்றார்கள் என்பது தோன்ற “உம்பர்தமக் கரிதாம் உன் பதத்தையன்றி ஒன்று மறியார் உன்னை உற்றோர் எல்லாம்” எனவும், தேவருலகத்துப் போகநுகர்ச்சியில் திளைக்கின்ற தேவர்கள், அதனின் நீங்கி மேலுள்ள சிவபதத்தை எய்துவதில்லை யாதலின் “உம்பர்தமக்கரிதாம் உன் பதம்” எனவும் உரைக்கின்றார். இம்பர் - இவ்வுலகம், உலகம் - மேலுலகம்; தேவருலகம். இவ்வுலகத்து மக்கள் வினை செய்தலும் வினைப்பயன் நுகர்தலும் இயல்பாக உடையவர் ஆதலின் “இம்பர் வினை யுடையேன் நான் ஒருவன்” என்றும், வினைவகையில் பாவ வினையைப் பெரிதும் செய்துள்ளமை புலப்பட “பாவி” என்றும் தம்மைக் குறிக்கின்றார். வினையிலே கிடந்துழல்வதால் எக்காலத்தும் எவ்விடத்தும் வினையே செய்து நின் திருவருளை எள்ளத்தனையும் சிந்திப்பதில்லை யாயினேன் என்றற்கு “என்றும் எட்டுணையும் நினைந்தறியேன்” என்று இயம்புகிறார். எப்பொழுதும் சிந்திப்பதையே செயலாகவுடைய மனத்தின்கண் திருவருட் சிந்தனை யில்லையாயின் வேறு சிந்தனையும் தோன்ற இடம்பெறுதல் இயல்பாதலால், தமது சிந்தையின்கண் மகளிர் நினைவு தோன்றி மையற்படுத்தின என்பாராய் “வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே மனமுடையேன்” எனவும், அந்நினைவு செயல்களால் சோர்வுற்றமை விளங்க “உழைத்திளைத்த மாடு போல்வேன்” எனவும் ஓதுகின்றார். இத்தகைய நினைவு செயல்களே என் வாழ்க்கைக் கூறுகளாக இருப்பதால், நான் துன்பமே உற்றுத் துயர்கின்றேன் என்பார் “இல்வாழ்க்கைத் துன்பில் அலைகின்றேன்” எனவும், இவ்வகையில் தாம் எய்திய கையறவினை “என் செய்கேன்” எனவும் எடுத்தோதுகின்றார்.
இதனால், வாழ்க்கையில் மகளிரால் விளையும் மையற் துன்பமும் பிற வாழ்க்கைத் துன்பங்களும் எடுத்துக்காட்டி விண்ணப்பித்தவாறாம். (9)
|