61. தெள்ளகத் தோங்கிய செஞ்சுடரே
சிவ தேசிகனே
கள்ளகத் தேமலர் காவார் தணிகையெங்
கண்மணியே
எள்ளகத் தேயுழன் றென்னின்றலைத் தெழுந்
திங்கு மங்கும்
துள்ளகத் தேன்சிரம் சேருங் கொலோநின்
துணையடியே.
உரை: அகத்தே தேன் நிறைந்த மலர்ச் சோலைகள் பொருந்திய திருத் தணிகையில் எழுந்தருளும் எங்கள் கண்மணியே, தெளிந்த மனமுடைய உள்ளத்தில் ஓங்குகின்ற செஞ்சுடரே, சிவகுருவாயவனே, யாவராலும் இகழப்படும் மனை வாழ்விற் கிடந்து வருந்தி என்பால் நிலையுற விருந்து பல்வகை ஆசைகளால் கலக்கி இங்குமங்கும் என்னை அலைவிக்கும் மன முடையேனாகிய என் தலைமேல் நின்னுடைய இரண்டாகிய திருவடிகள் வந்து பொருந்துமோ, அறிகிலேன், எ. று.
கள் - தேன். தேனை அகத்தே யுடைய மலர் தேமலர் எனப்படுகிறது. கண்ணிற்கு மணி போல் உயிரறிவுக்கு ஞான மருளுதலால் “எம் கண் மணியே” என வுரைக்கின்றார். மண்ணகத்து மனை வாழ்வு குற்றம் செய்வித்துத் துன்பம் நுகர்வித்தல் பற்றி அறவோரால் இகழப்படுவது கண்டு “எள்ளகம்” என்று குறிக்கப்படுகிறது. எள்ளகம் என்றதற்கேற்பத் தாம் எய்திய துன்பத்துக் கேதுவாகிய மனத்தின் செயலை, அகத்தே நின்று உழன்று மடிதலும் எழுதலும் இங்குமங்கும் துள்ளித் திரிந்ததும் எடுத்துரைப்பாராய், “அகத்தே உழந்து என்னின் றலைத்து எழுந்து இங்கும் அங்கும் துள்ளகத்தேன்” எனச் சொல்லுகின்றார். இறைவன் திருவடியைத் தலையிற் சூடிக் கொள்வதில் தொண்டர் பெருவிருப்புடையர்; “எம்மான் தன் அடிக் கொண்டென் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்” (அதிகை வீரட்) என்று நம்பியாரூரர் உரைப்பதும், “கோவாய் முடுகியடு திறற் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என் மேற் பொறித்து வை” (சத்தி முற்றம்) என நாவுக்கரசர் விண்ணப்பம் செய்வதும், காண்க. அவர்கள் காட்டிய நெறியினராதலால் வள்ளற் பெருமான் “துள்ளகத்தேன் சிரம் சேரும் கொல்லோ நின் துணையடியே” என்று முறையிடுகின்றார்.
இதனால் முருகப் பெருமான் திருவடிப் பேறு தமக்கு எய்த வேண்டுமெனும் விருப்பத்கை வெளிப்படுத்தவாறாம். (61)
|