610.

     கொலைஅறியாக் குணத்தோர் நின் அன்பர் எல்லாம்
          குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
     புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
          புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
     நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
          நினையன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
     அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
          அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.

உரை:

     கொலை புலை முதலிய குற்றமில்லாத நற்குணம் நிறைந்த நின்னுடைய அன்பர்கள் எல்லாம் குணமான செயல்களையே செய்து நினது திருவருள் நீழலை அடைகின்றார்களாக, புலைத்தொழிலைச் செய்தறிந்தவனாகிய நான் ஒருவன்தான், குற்றமே புரிந்து கண் காது கெட்ட மாடு போல மனநிலை கலங்கி, நிலைகொள்ளாமல் நன்னெறி யொன்றும் காணாமல் எவ்விடத்தும் நின்னையன்றி வேறு துணை யாதும் அறியேனாய் வீணே அலைந்து வருந்துகின்றேன். ஐயோ, நான் என்ன செய்வேன்? அலைகளே இல்லாத திருவருட் கடலாக இருக்கும் நீ என்னை ஆண்டருள்வாயாக. எ.று.

     கொலை, பொய் முதலிய குற்றம் ஒன்றுமின்றிக் குணமே நிறைந்து தூய அன்பு நிறைந்த பெருமக்களாதலால், சிவனடியார்களை “நின் அன்பர் எல்லாம் கொலை யறியாக் குணத்தோர்” என்றும், அவர்கள் மக்களினத்திற்கும் ஏனை உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் நல்லனவே செய்து சிவபெருமானுடைய திருவருள் இன்பத்தை எய்துகின்றார்களாதலால், “குணமே செய்து உன்னருள்தான் கூடுகின்றார்” என்றும் புகல்கின்றார். புலை, கொலை முதலிய குற்றங்கட் கிடனாய்ப் பிழை பல செய்து அறிவிழந்த விலங்குபோல் உழல்வதாகத் தம்மை இடித்துரைக்குங் கருத்தினராதலின், “புலையறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலங்கெட்ட விலங்கேபோல் கலங்குகின்றேன்” எனவும், அதனால் அருட் பேற்றிற்குரிய இயல்நிலையும், மெய்ந்நெறியும் அறியாமை புலப்பட “நிலையறியேன் நெறியொன்றும் அறியேன்” எனவும், எனினும் சிவனையன்றி நமக்குத் துணையாவார் பிறரில்லை என்பதை நன்கறிந்திருக்கின்றமை இனிது விளங்க “நினையன்றித் துணையொன்று மறியேன்” எனவும் இசைக்கின்றார். புலையறிவேன் என்றவிடத்துப் புலையென எடுத்து மொழிந்தாராயினும் இனமான கொலை, கள் முதலியனவும் கொள்ளப்படும். “எடுத்த மொழி இனஞ்செப்பலும் உரித்தே” என்பது தொல்காப்பியம். விலங்கெனப் பொதுப்படக் கூறினாராயினும் ஈண்டுச் சிறப்பாகக் கண்ணறிவும், காதறிவும் கெட்ட எருதின்மேல் நின்றதாகக் கொள்க. நெறி - திருவருட்பேற்றிற்குரிய மெய்ம்மை நெறி. அருட் கடல் என்பது மாயா காரிய தத்துவக் கடற்கு அப்பாற்பட்டதாகலின், அங்குக் காற்று முதலிய பூதங்களின் சேட்டையின்மையின் அலை தோன்றுதற்கு இடமில்லாமை நோக்கி “அலை யறியா அருட் கடல் நீ” என்று சிறப்பிக்கின்றார். இதனை வெளிப்படை என்னும் அணி என்றும் கூறுவர். நின்னையன்றித் துணை வேறில்லை என்றறிந்தும் பிற பொருள்களை நினைந்து திரிந்து வருந்துவது வீண் செயலாதல் பற்றி, “வீணில் அலைகின்றேன் என்செய்கேன்” என்று வருந்துகிறார்.

     இதனால், பரம்பொருளே பெருந்துணையாவ தறிந்திருந்தும் சிறுமை விளைவிக்கும் பிழைகளால் மனம் சலித்து அலமருவது சொல்லி விண்ணப்பித்தவாறாம்.

     (10)