5. கலி முறையீடு

பொது

    கலி என்பது வருத்தத்தை யுணர்த்தும் ஒரு தமிழ்ச் சொல். பொய் யுரைத்தல், வஞ்சித்தல், இரக்கமில்லாமை முதலிய தீமைச் செயல்களால் ஒருவர் எய்துவித்துக்கொள்ளும் துன்பவகை பலவும் இக் கலிச் சொல்லின் பொருண்மைக்குள் அடங்கும். கலித்தல் என்னும் வினைச் சொல் முறையே பெருகுதலை யுணர்த்துவதால் தொடக்கத்தில் சிறிதாய்த் தோன்றி, நாளடைவில் பெருகி வருத்தும் துன்பத்தை யுணர்த்துமென நினைப்பது பொருந்திய கொள்கையாகும்.

    துன்பப் பொருண்மைமேல் நிற்கும் கலி முறையீடு என்ற இப்பத்து மூவகைச் சந்த வேறுபாடு கொண்ட கலிவிருத்தத்தால் உருவாகி, அந்தாதித் தொடையும் அமைந்துள்ளது.

    துன்பக் காரணங்களில் ஒன்றான பொய்ம்மைக் கலியை ஏழு பாட்டுக்களிலும், வஞ்சக் கலியை மூன்று பாட்டுக்களிலும், இரக்க மில்லாமை, அல்லல் ஆகியவற்றை இரண்டு பாட்டுக்களிலும் உரைக்கின்றார்.

    இம் முறையீட்டின்கண் அன்பர் சங்கத்தையும் அருளாளர் சபையையும் வள்ளற்பெருமான் குறித்தருளுகின்றார்.

கலி விருத்தம்

611.

     பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
     கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
     பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
     பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.

உரை:

     படமும் விடமும் உடைய பாம்பையும் அணியாக ஏற்றுக் கொண்ட நீ பெய்யப்பட்ட விடம் போன்ற என் பிழையைப் பொறுத்தற்கு எமது புண்ணிய மூர்த்தியாகிய சிவனே, பொய்ம்மைச் செயலைத் துறந்து விடுகிறானில்லையே யென்று வெறுத்துக் கடையனாகிய என்னைக் கைவிடுகின்றாய் போலும். எ.று.

     கண்டார் அஞ்சி நீங்குதற்குப் படமும், அணுகிய வழித் தீண்டிக் கொல்லற்கு நஞ்சும் கொண்டிருத்தலின் “பைவிடம் உடைய வெம்பாம்பு” என்றும், மருந்து பெய்தவிடத்து எய்தின் நீங்கும் விடம் போன்றது என் பிழை என்றற்குப் “பெய்விடம் அனைய என் பிழை” என்றும் கூறுகின்றார். எளிதின் நீங்காத வெம்மையான விடப்பாம்பை ஏற்ற நீ எளிதின் நீங்கக்கூடிய என் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்றற்காக “வெம்பாம்பும் ஏற்ற நீ என் பிழை பொறுக்க” என்று வேண்டுகிறார். பிழையுடைமை பற்றித் தன்னைக் “கடையனேன்” என்று இழிக்கின்றார். விரைந்து போக்காமை கண்டு “கைவிடுகின்றியோ” என்றும், அதற்குக் காரணம் பொய்ம்மை நீங்காமை என்பது புலப்படப் “பொய் விடுகின்றிலன் என்று கைவிடுகின்றியோ” என்றும் இசைக்கின்றார். எம் புண்ணிய மூர்த்தியாகிய நீ பிழை பொறுத்தல் கடன் என்றற்கு “எம் புண்ணியா” என இயம்புகின்றார்.

     இதனால், பொய்யுடைமையாற் கடையனாயினும் பிழை பொறுத்தருள்க என வேண்டியவாறாம்.

     (1)