613.

     செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
     புல்லலும் கொண்டஎன் பொய்ம்மை கண்டுநீ
     கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள்
     மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.

உரை:

     சடையை மகுடமாகக் கொண்ட வள்ளலாகிய சிவ பெருமானே, இன்னாமை செய்யும் தன்மையும் சிறுமைச் செய்கையும் சினமும் அற்பரொடு நட்புறும் புன்செயலுமுடைய என்னுடைய பொய் யொழுக்கத்தைக் கண்டும் என்னை மேலும் இருக்கவிடாது கொல்லுதல் தக்கதாகும்; கொல்லாமல் அருளுதலும் உனது வள்ளன்மைக்கு ஒத்ததாம். எ.று.

     செல்லல் - இன்னாமை; ஈண்டுப் பிறர்க்குச் செய்யும் துன்பத்தின் மேற்று. சிறுமையாவது, “அளவிறந்த காமம்” என்பர் பரிமேலழகர். சினம் - வெகுளி. புல்லரைப் புல்லுதல் - சிற்றினத்தைச் சேர்தல். இக் குற்றங்களை யுறுவித்து வளர்ப்பது பொய்யொழுக்க மாதலின், “செல்லல் முதல் புல்லரைப் புல்லல் ஈறாகவுள்ள குற்றங்களைக் கொண்ட என் பொய்ம்மை கண்டு” என்றும், கண்டவிடத்து இக் குற்றமுடைய கொலையால் ஒறுத்தல் “களை கட்டது நேர்” என்பவாகலின், “என் பொய்ம்மை கண்டு நீ எனைக் கொல்லலும் தகும்” என்றும், சடா மகுட வள்ளலாதலின் அருள் செய்தலும் தக்கதாம் என்றற்கு “கொன்றிடா தருள் மல்லலும் தகும் சடா மகுட வள்ளலே” என்றும் இயம்புகின்றார். மல்குதல் - மல்லல் என வந்தது.

     இதனால், பொய்ம்மை யொழுக்கம் குற்றம் அனைத்துக்கும் முதலாதல் பற்றிக் களைபோக்குதல் போலக் கொல்லலும் தகும் என்று கூறியவாறு.

     (3)