615. செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப்
பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல்
வையநின் றையவோ மயங்கல் அன்றியான்
உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே.
உரை: செம்மையதாகிய அறத்தை யறியாத சிறியனாகிய என்னைப் பொய்யொழுக்கத்தை யுடையவன் என்று துணிந்து நீ என்னைப் புறத்தே தள்ளுவாயாயின், ஐயனே, இவ் வையத்திடையே இருந்து மயங்குவதன்றி, உய்தி பெறுமாறு யான் நிலையாக நின்று உணரத்தகுவது ஒன்றும் இல்லை. எ.று.
நன்று - அறம். அறத்திலும் செம்மையானது பிறிது யாதும் இன்மை பற்றி அது, “செய்ய நன்று” எனப்படுகிறது. சிவபதத்தினும் செம்மைப்பதம் வேறு யாதும் இன்றாகவும் அதனைச் “செம்மையாய சிவபதம்” என மணிவாசகப்பெருமான் உரைப்பது நினைவு கூர்க. பெருமை எய்துதற்குரிய நன்றினை அறியாமையால் உற்றது சிறுமை யாதலால், தம்மைச் “சிறியனேன்” எனக் குறிக்கின்றார். பெருமைக்கு மறுதலை சிறுமை. நன்றினை யறியாமைக்கேது, மேற்கொண்டிருந்த பொய்யொழுக்கமாவே, அதனைப் பன்னெறியால் தெரிந்து துணிந்து இப் பெற்றயோன் நம் சூழற்காகான் என இறைவன் விலக்குவது தெளியப்பட்டமையால், “பொய்யனென் றெண்ணிநீ புறம் பொழிப்பையேல்” என்றும், இறந்தொழியேனாயினும் செய்வகை யுணர்வின்றி மயங்குவேன் என்பார். “வையம் நின்று ஐயவோ மயங்கலன்றி” என்றும், வேறு வகையால் உய்தி பெறற்கு நெறி யாதும் எனக்குத் தோன்றவில்லை என்பார், “உய்ய நின்று உணர்குவ தொன்றுமில்லையே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், பொய்யனென்று காரணம் காட்டி என்னைப் புறம் பொழித்தால் உய்யும் நெறியறியாது மயங்கி வருந்துவேன் என்பதாம். (5)
|