New Page 1

(வேறு)

616.

     இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
     தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
     வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
     தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.

உரை:

     தில்லையம்பலத்தில் ஆடுகின்ற சிவமாகிய பரஞ்சோதியே, இல்லையென்னாமல் அருட்செல்வம் வழங்கும் கடல் போன்றவனே, எளியனாகிய யான் செய்யும் வஞ்சனை யனைத்தையும் விரைந்து பொறுத்து எல்லையற்ற இன்பம் எனக்கு உதவ வேண்டுகிறேன். எ.று.

     இப் பாட்டுக் கலிப்பாவினத்து விருத்த வகையைச் சேர்ந்தது; ஆயினும் சீர் கொடுப்பதில் சந்தம் வேறுபட நிற்றலால் இதன் தலைப்பில் வேறு எனக் குறித்துள்ளனர். சந்தம் வேறுபடினும் கலிவிருத்தம் என்ற இனப் பாகுபாடு வேறுபடவில்லை யென அறிக. வெள்ளம் ஈண்டுக் கடல்மேற்று. இறைவனை அருட்கட லென்பதுபற்றி, “அருள் வெள்ளம்” என்று கூறுகிறார். அப்பெற்றியோன் இல்லை என்று சொல்லுதல் இல்லை யாதலால் “இல்லையென்பது இலா அருள் வெள்ளமே” என மொழிகின்றார். உயர்வுற வுயர்ந்தோனாதலால் இறைவன்பால் இல்லையென்று சொல்லும் சொல் உளதாகாது. “இலன் என்னும் எவ்வம் உடையாமை ஈதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள்) என்று சான்றோர் கூறுவது அறிக. தில்லை மன்று, தில்லைப்பதியில் உள்ள பொன்னம்பலம். அங்கே கூத்தர் வடிவில் சிவம் மேலான சோதியாய்த் திகழ்தலால் “மன்றிற் சிவபரஞ் சோதியே” என்று தெரிவிக்கின்றார். எளியேன் செய்யும் வஞ்சனைகளை விரைந்து பொறுத்து அருளாதொழியின், அவை எத்தகையோரும் பொறுக்கும் எல்லையைக் கடந்து போம் என்றற்கு, ‘யான் செயும் வஞ்சமெலாம் வல்லை பொறுத்து” என்றும், யான் செய்யும் வஞ்சம் பொய்யின்பம் வேண்டி யியல்வனவாதலால், மீளவும் அவற்றைச் செய்யா தொழிதற்கு மெய்யாய பேரின்பம் விரைந்து தருக என வேண்டுவாராய், “ஒல்லை யின்பம் உதவுதல் வேண்டுமே” எனவும் இயம்புகின்றார்.

     இதன்கண், என்பால் வஞ்சனையாய குற்றம் பெருகத் தோன்றுதற்கு முன் திருவருள் நல்குக என வேண்டுமாறு காணலாம்.

     (6)