New Page 1
(வேறு)
617. இல்லையே என்பதிங் கில்லை என்றருள்
நல்லையே நீஅருள் நயந்து நல்கினால்
கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம்
ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே.
உரை: நற்பண்புடைய ஐயனே, உனது பேரருளை நீ விரும்பி நல்குவாயாயின், கல்லே ஒத்த எனது கன்மக் கருவியாகிய நெஞ்சம் வஞ்ச நினைவு செயல்களை விரைந்து கைவிட்டு மெய்யாகவே மகிழ்ச்சியுறும்; ஆதலால், இல்லை என்று சொல்லும் இழிசொல் எம்பால் கிடையாது என்று நின் பேரருளை நல்குக. எ.று.
ஐயன் - தலைவன். நன்மை யல்லது பிறிதறியாத பெருந்தகைத் தலைவனாதலின் இறைவனை, “நல்லையே” என்று இயம்புகின்றார். நல்லை என்பதை நன்மைப் பண்புடையை எனக் கோடலு மொன்று. இறைவன் திருவருள் ஞானவொளி நல்குவதாகலின், அத் திருவருள் வந்தெய்தின் மனம் குற்றமெல்லாம் ஒழிந்து ஞானப் பொருளாமாதலின், “நெஞ்சகம் ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும்” என்று உரைக்கின்றார். அருளொளி யின்மையால், அம் மனம் இரக்கமிழந்து கற்பாறையின் தன்மையுற்றுத் தீவினை செய்தற்கே கருவியாதலின், “கல்லையே யனைய என் கன்ம நெஞ்சகம்” என மொழிகின்றார். கன்மம் செய்தற்குக் கருவியாகிய மனம் “கன்ம நெஞ்சம்” எனப்படுகிறது. திருவருள் நலத்தை இல்லையென்னாமல் ஈந்தருள்க என்பாராய், “இல்லையென்பது இங்கு இல்லை என்று அருள்” எனப் புகல்கின்றார்.
இதனால், இறைவன் திருவருள் விரைய வந்ததெய்தின் கன்மனம் இரக்கமுடைய நன் மனமாகும்; நல்வினைக்குரிய கரணமாம் என்பதாம். (7)
|