618.

     உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
     எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
     அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
     வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.

உரை:

     அணிமையில் அம்பலத்தில் ஆடுகின்ற ஐயனாகிய, நீ வண்மைமிக்க திருவருட் பெருங் கடலன்றோ; அங்ஙனம் இருக்க, உள்ளதன் உண்மையை உள்ளவாறறிய மாட்டாத ஒதி மரம் போலிருக்கும் யான் உறுகின்ற எளிமையைக் கண்டும் உள்ளத்தில் இரக்கம் கொள்கின்றாயில்லையே, இதற்கு என்னென்பது? எ.று.

     ஆங்காங்குள்ள திருக்கோயில்தோறும் கூத்தாடும் பெருமானுக்குத் திருவம்பலமுண்மையின், “அண்மையே அம்பலத்தாடும் ஐய” என்று உரைக்கின்றார். வளமை, வண்மை என வந்தது. ஞானமும் செல்வமும் வழங்கும் வளவிய கடவுளாதலின், “வண்மையே அருட்பெரு வாரியல்லையோ” என்று கூறுகின்றார். பெருவாரி - பெருங்கடல். தெளிந்த அறிவில்லாமல் நெடிது வளர்ந்துளேன் என்றற்கு, “உண்மையே யறிகிலா ஒதியனேன்” என்று உரைக்கின்றார். ஒதியனேன் - ஒதிமரம் ஒத்தவன். துன்ப மிகுதியால் மனத்தினும் உடலினும் உளதாகிய மெலிவினை “எண்மை” என்று குறிக்கின்றார். மெலிவுடையார் மேல் இரக்கம் வைப்பது மற்றையோர்க்குக் கடன்; ஏனோ நீ செய்திலை என்பாராய், “எண்மை கண்டும் உன் இரக்கம் வைத்திலை” என்று இயம்புகின்றார்.

     இதனால், உண்மையறியும் திறமில்லாத எளிய என்பால் அருள் வைத்தல் வேண்டும் என்பதாம்.

     (8)