619. அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்ம்மையே.
உரை: புகழ் விளங்குகின்ற வலிய விடையின்மேல் தோன்றும் பெருமானாகிய நின்னுடைய அருளாகிய வளவிய கடலின்கண், துன்பக் கடலில் வீழ்ந்துகிடக்கும் நாயனையேன் மகிழ்ச்சியுடன் மூழ்கினால், கற்பாறையொக்கும் வலிய மனம் கனிவுறுதல் உண்மையாகும். எ.று.
சொல் - புகழ். அலங்குதல் - விளங்குதல். திருமாலே விடையுருவில் நின்று சிவனைத் தாங்குகின்றானென்பது புராண வரலாறாதலின், அதனை யுட்கொண்டு “சொல்லலங்கு அடல் விடை” என்று புகழ்கின்றார். விடையேறும் பெருமானாதலின் சிவனை, “விடைத் தோன்றல்” என விளம்புகின்றார். தோன்றல் - தலைவன். மல்லல் - வளம். உலகில் உள்ள கடல்களின் வேறான திருவருளாகிய வளம் நிறைந்த கடல் என்றற்கு “அருள் மல்லலங் கடல்” என உரைக்கின்றார். அருட்கடல், மல்லலங்கடல் என இயையும். கல் அலங்கு அடல் மனம் - கற்போலும் வன்மை யமைந்த மனம். இரக்கமின்றித் திண்மை மிக்கிருந்த மனம், அருளில் தோய்வுறின் மென்மையுற்று அளிந்த கனி போல் விளங்கும் என்றற்கு “மனம் கனிதல் மெய்ம்மையே” என உரைக்கின்றார்.
இதனால், இறைவன் திருவருள் தோயுமாயின் கற்போன்ற மனமும் நெகிழ்ந்துருகும், மென்மை எய்தும் என விளக்கியவாறாம். (9)
|