62.

    அடியேன் எனச் சொல்வ தல்லானின் றாளடைந்
        தாரைக் கண்டே
    துடியே னருணகிரி பாடும் நின்னருள்
        தோய் புகழைப்
    படியேன் பதைத் துருகேன் பணியேன்
        மனப்பந்த மெலாம்
    கடியேன் தணிகையைக் காணேன்என்
        செய்வே னெங் காதலனே.

உரை:

     எங்கள் அன்பை யுடையவனே, உனக்கு அடியவன் என்று சொல்லிக் கொள்வதன்றி உன் திருவடியை அடைந்த பெரியோரைக் கண்டால் அன்பால் என் மனம் துடிப்பதில்லை; அருணகிரியார் பாடிய நினது அருள் வாய்ந்த திருப்புகழ் நூலை யான் படிப்பதில்லை; அன்புற்று உள்ளம் பதைப்பதில்லை; உருகுவதில்லை. மெய்யாற் பணிவதில்லை; பந்தமாய் உள்ளவற்றை நீக்கினேனில்லை; உனது தணிகை மலையைத் தரிசிப்பதுமில்லை; யான் என்ன செய்வேன்? எ. று.

           காதலன் - அன்புடையவன். வாயளவில் நான் முருகனுக்கு அடியவன் என்று சொல்லுவ தொழிய, உன்னுடைய மெய்யடியாரைக் கண்டவிடத்து அன்பு மிகுந்து உடல் துடிக்கச் சூழ் வந்து போற்றுவதில்லேன் என்பார், “நின்தாள் அடைந்தாரைக் கண்டு துடியேன்” என்று கூறுகின்றார். அடைதல், ஈண்டு மனத்தால் நினைந்து, வாயால் துதித்து மெய்யால் வணங்குதல். அருணகிரியார் பாடிய திருப்புகழ் முருகப் பெருமான் திருவருளால் தோன்றிய தென்றும் அதனை ஓதுதற்கே அப்பெருமான் அருள் வேண்டுமென்றும் பெரியோர் கூறுவது பற்றி, “அருணகிரி பாடும் நின் அருள்தோய் புகழ்” என்று சிறப்பிக்கின்றார். “ஆனை முகவற் கிளைய ஐயா அருணகிரி, தேனனைய சொல்லான் திருப்புகழை - யான் நினைந்து, போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலம், சாற்றிடவும் ஓதிடவும் தா” எனவரும் பழம்பாட்டு இக்கருத்தை வற்புறுத்துகிறது. “அருணகிரி வாழ்த்தும் திருப்புகழைக் கற்பார் கரையேறுவார்” என்பதனால், திருப்புகழைப் “படியேன்” என்றும், பொருளறிந்து உள்ளம் “பதைத்துருகேன்” என்றும் இயம்புகின்றார். உயிர்ப் பொருளும் உயிரில் பொருளுமாகிய உலகியற் பொருள் தொடர்பு பந்தம் எனப்படும். இத்தொடர்பற்றாலன்றி மன்னுயிர்க்கு உய்தி கிடையாதாகலால் “பந்தமெலாம் கடியேன்” என்று வருந்துகின்றார். கடிதல் - நீக்குதல். “தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தார மென்னும், பந்த நீங்காதவர்க் குய்ந்து போக்கில்லெனப் பற்றினாயே” (ஆரூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க.

     இதனால் குறைகளாய்த் தம்பால் உள்ளன கூறி முருகனை உய்ந்து போக்கருள்க என வேண்டிக் கொண்டவாறாம்.

     (62)