6. அச்சத் திரங்கல்

கோயில

    அஃதாவது, பல காரணங்களால் உள்ளத்திற் பிறக்கும் அச்சத்தால் வருந்துதல் கூறியவாறாம். இதன்கண், மூடத்தன்மை நினைந்தும், அறிவின்மையால் நிகழும் பிழைகளை யெண்ணியும், மயக்கத்தால் உளதாகும் துன்பத்திற் கஞ்சியும், ஈயாதாரிடம் சென்று உற்ற இடர்களுக்கஞ்சியும், ஏனைத் துயர்கட்கஞ்சியும், வினைத் துன்பத்திற்கஞ்சி வெய்துற்றும், திருவருள் பெறாமையால், அஃது எய்துங் காலம் என்றோ என அதனை எண்ணி ஏங்கியும், சிவஞானம் பெறுமாறு நினைந்து அஞ்சியும், வள்ளற் பெருமான் மனச் சோர்வுற்றமை வெளிப்படுவது காணலாம்.

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

623.

     துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
          சுயம்பிர காசமே அமுதில்
     கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
          கடவுளே கண்ணுதற் கரும்பே
     குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
          கொடுந்துய ரால்அலைந் தையா
     முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
          மூடன்என் றிகழ்வது முறையோ.

உரை:

     துறைகளைப் பொருந்திய கங்கையாற்றைத் தாங்குகின்ற வளவிய சடையையுடைய கனியே, தன்னிற் றானே தோன்றி யொளிரும் ஒளியே, அமுதத்திற் கறை படிந்தாற்போலக் கரிய கழுத்தைக் கொண்ட ஒப்பற்ற பெரிய கருணையேயுருவான கடவுளே, கண்ணை நெற்றியிலேயுடைய கரும்புருவே, குறைகளையே செய்யும் குணமுடையனாதலால் கொடியவனே யென்றாலும், கொடுமைப்படுத்தும் துன்பங்களால் அலைப்புண்டு ஆற்றாமல் நின்பால் முறையிடுகின்றேனாக. ஐயனே, நீ எனக்கு அருளறிவு நல்காது இன்னொரு மூடன் என எண்ணி இகழ்வது முறையாகாது என்று சொல்ல அஞ்சி வருந்துகிறேன். எ.று.

     துறை - மாக்களும் விலங்கும் சென்று நீர் படிந்துண்ணும் வழிகளையுடைய துறை. பலவின் பழத்தைச் சடைக்கனி யென்னும் வழக்குப் பற்றி முடியிற் சடையுடைய சிவபிரானை, “சடைக்கனி” எனப் புகல்கின்றார். ஞாயிறு, திங்கள் முதலிய ஒளிப்பொருள்கள் போலாது தானே ஒளிக்கு மூலமும் முதலும் ஆதல்பற்றிச் சிவனைச் “சுயம் பிரகாசமே” என்கிறார். கறை - கடல் விடம் உண்டதால் உண்டாகிய கறை. அமுத வடிவாகிய இறைவன் திருக்கழுத்தில் காணப்படுவது பற்றி “அமுதிற் கறைபடும் கண்டம்” என்று சொல்லுகிறார். குணம்போலக் குறைகள் உடன் தோன்றுவன வல்லவாயினும் தம்பால் தொடக்கமுதலே நின்று நிலவுதல் தோன்ற, “குறையிடும் குணத்தாற் கொடியேன்” என்று தம்மைக் குறிக்கின்றார். குறையும், கொடுமைச் செயலுமுடையவர் துன்புறுதல் இயல்பாதலின் ‘கொடுந்துயரால் அலைந்து வருந்துகிறேன்’ என்று கூறுகிறார். நீக்குதற்கும் திருத்துதற்கும் உரியது குற்றம் என்பதறிந்தும் அயராது செய்தலால் தன்னை மூடன் என்று சொல்கிறார். மூடன் - அறிவதறியாதவன்.

     இதனால், தன்னை மூடன் என்று இகழ்வது முறையாகாது என இரங்கியவாறாம்.

     (1)