625.

     பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
          புத்தமு தேகுணப் பொருப்பே
     இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
          இன்பமே என்பெருந் துணையே
     அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
          அண்ணலே நின்அடிக் கபயம்
     மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
          மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.

உரை:

     இடமும் காலமும் நோக்கி இனம் இனமாகப் பொருள்களைத் தோற்றுவித்துக் கூட்டும் புண்ணியப் பொருளாயவனே, புத்தின்பம் நல்கும் அமுதமே, நற்குணமே யுருவாகிய மலையே, இருள் வகை யனைத்தையும் கெடுத்தொழிக்கும் பெரிய ஒளிப்பிழம்பே, இன்பமே, எனது பெரிய துணையே, அருள் வகை பலவும் திரண்ட ஒப்பற்ற சிவ வடிவமே, அண்ணலே, நின்னுடைய திருவடியே அச்சமில்லாத புகலிடமாகும்; மருட்சி வகை பலவும் அடங்கிய மனத்தையுடைய துன்பங்கள் விளைவிக்கும் மயக்கம் அனைத்தையும் போக்கி என்னை ஆண்டருளுவாயாக; இல்லையாயின், பல்வகை அச்சங்கள் புகுந்து என்னை வருத்தும். எ.று.

     பல்வேறு வகையான பொருள்கள், பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு இனமாகப் பிரித்துக் காணத்தக்க வகையில் தோன்றி வளர்ந்து மண்ணக வாழ்க்கைக்கு அமைதி தருதலால் “பொருள் எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே” என்று புகல்கின்றார். பொருள்களைத் தோற்றுவிப்பதோடு மண்ணக வாழ்க்கைக்குப் பொருந்த அமைப்பதும் அப் புணர்ப்பு உயிர் வாழ்க்கைக்கு நலஞ் செய்யும் புண்ணியச் செயலாவதும் தோன்ற, “புணர்க்கும் புண்ணியப் பொருளே” என்று புகழ்கின்றார். நுகருந்தோறும் புதிய புதிய ஞானவின்பந் தருதலின், “புத்தமுதே” என்கின்றார். சலியாமை பற்றிக் “குணப் பொருப்பே” என்று குறிக்கின்றார். புறத்திருளையேயன்றி மாயா காரியப் பொருள் விளைவிக்கும் இருளையும், மலஞ் செய்யும் இருளையும் போக்குவது பற்றி, “இருளெலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே” எனக் கூறுகிறார். உள்ளொளியாய் அறிவருள்வதே யன்றி, அறிகருவி கரணங்களும் இனி தியங்கத் துணை செய்வதால், “பெருந் துணையே” என்று பேசுகின்றார். சிவத்தின் உருவம், அருளின் திருவுருவம் என்பதுபற்றி, “அருள் எலாம் திரண்ட ஒரு சிவமூர்த்தி” என்று சிறப்பிக்கின்றார். “பரமுதலாய தேவர், சிவனாய மூர்த்தி அவனாம் நமக்கோர் சரணே” (தசபு) என நாவுக்கரசரும், “செவ்வழலாய் நிலனாகி நின்ற சிவமூர்த்தி” (கடவூ) என ஞானசம்பந்தரும் கூறுவது காண்க. பிறவிக் கேதுவாகிய மருள் வகை யத்தனையும் தம்பால் இருக்கின்றமை யுரைப்பாராய், “மருள் எலாம் கொண்ட மனத்தினேன்” எனக் கூறுகின்றார். “பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும், மருளானாம் மாணப் பிறப்பு” (குறள்) எனத் திருவள்ளுவரும் உரைப்பது காண்க. பிறவிக் கேதுவாயிருந்த மருட்கையுடன், பிறந்த பிறவியில் வந்து பிறக்கும் மயக்கம் பலவாதலின், அவற்றையும் போக்கியருளுதல் வேண்டுமென்பார், “துன்ப மயக்கெலாம் மாற்றி யாண்டருளே” என வேண்டுகிறார். “மண்ணில் மாயை மதித்து வகுத்த மயக்கறும்” (திருப்படை) என வாதவூரடிகள் கூறுவது காண்க.

     இதனால், மயக்கத்தால் எய்தலாகும் அச்சம் நினைந்து, அதனை அறுத்தருள் என வேண்டியவாறாம்.

     (3)