626.

     ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
          றணுத்துணைத் திவலையே எனினும்
     ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
          இல்லையேல் என்செய்கேன் எளியேன்
     நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
          நினைப்பரும் நிலைமையை அன்பர்
     வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
          விமலனே விடைப்பெரு மானே.

உரை:

     மெய்யன்பர்கள் விரும்பினும் விரும்பா தொழியினும், திருமால், பிரமன் ஆகியோர் பதங்களையும், ஏனைத் தேவர்களால் நினைத்தற்கரிய பதங்களையும், அவ்வப்போது அவர்கட்கு அளித்து இன்புறுத்தும் விமலனும், விடையேறும் பெருமானுமாகிய சிவனே, அடியார்களை ஆண்டருளும் நின் கருணைக் கடலிலிருந்து ஒரு துளியில் ஓரணுவளவெடுத்து என்மேல் தெளிப்பாயேல், யான் உய்தி பெறுவேன்; இல்லையேல், எளியேனாகிய யான் என்ன செய்வேன் என அஞ்சுகிறேன். எ.று.

     நீண்டவன் - திருமால். உலகெலாம் அளத்தற்கு உயர்வற உயர்ந்து நின்ற திருமாலின் அருட் செயலை நினைவுகொண்டு “நீண்டவன்” என்கின்றார். எத்தகைய தேவரும் அடைதற்கரிய பரசிவ நிலையாதலின், திருமால் முதலிய ஏனை வானவர்கள் “நினைப்பரும் நிலைமையை” என்கின்றார். சிவபதத்தை விரும்பாத அன்பர் யாவருமிலராதலின், யாப்புறுத்தற் பொருட்டு, “வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்களிக்கும் விமலனே” என விளம்புகின்றார். விமலன் - மலமில்லாதவன். இறைவனது திருவருளைக் கடல் என உருவகஞ் செய்தலால், சிறிதருளினும் நான் பெரிதும் உய்தி பெறுவேனென உரைக்கலுற்றவர், “நின் கருணைக் கடலிடை ஒருசிற் றுணுத்துணைத் திவலையே யெனினும்” என்கின்றார். திவலை - துளி. மி்கச்சிறு துளி யென்றற்கு “ஒரு சிற்றணுத் துணைத் திவலை” என்கின்றார். அருளின் பெருமையைப் புலப்படுத்துதற்கு உடல், கருவி, கரணமாகிய வற்றைக் கொடுத்து அருளியமை பற்றி “ஆண்ட நின் கருணை” யென்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், அருள் பெறாவிடின் வரும் ஏதத்திற் கஞ்சி, அருளின் ஒரு துளியளவேனும் தந்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம்.

     (4)