628. விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
விருப்பினை நெருப்புறழ் துன்பின்
இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
தனைஅன்றி அறிந்திலேன் தமியேன்
கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
கிளர்தரும் சிற்பர சிவனே.
உரை: பல கிளைகளாய்ப் பிரிந்து போந்த கங்கை யாற்றைச் சடையில் தாங்கியவனே, மிக்குத் தோன்றும் ஞானமேயான பரசிவனே, பிறவிப் பிணிக்குக் காரணமாகிய ஐம்புல வேட்கையைப் பெருக்கி, நெருப்பினும் மிகச்சுடும் துன்பங்களால் என் மனமும் உடம்பும் சேர மெலிந்தேன்; இதற்குக் காரணம் எனது ஏழைமையாகும்; ஆகவே யான் என்ன செய்வேன்; என்னுடைய குற்றங்களைப் பொறுத்து முன்னேற விடாது தடுக்கும் வலிய துன்பங்களைத் துடைத்து என்னை ஆண்டு கொள்ள வல்லவர் நின்னையன்றித் தனியனாகிய யான் வேறு யாரையும் அறியேனாதலால், அறியாமையால் உண்டாகும் அச்சங்களை நீக்கி யருள வேண்டும். எ.று.
மேன்மேலும் மிகுகின்ற சிவஞானமே திருமேனியாக வுடையவனாதலின், “கிளர் தரும் சிற்பர சிவனே” என்கின்றார். பரசிற்சிவன்என இயைத்து, பரஞான மூர்த்தமாகிய சிவனே யெனினு மமையும், ஐம்புல ஆசைகளால் உண்டாகும் துன்பங்கள் பிறவி நோய்க்கு ஏதுவாதல் பற்றி, “விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய விருப்பினை” எனவும், துன்பங்கள் தீயைப்போல் சுட்டு வருத்துவது பற்றியும், தீயிற் சுட்ட பொருள் சுருங்குவதுபோல மேனி யிளைப்பது பற்றியும், “நெருப்புறழ் துன்பின் இளைத்தனன் அந்தோ” எனவும், ஐம்புல ஆசைக்கு இடங்கொடாது அறுத்தெறியும் நல்லறிவு இல்லாமை தோன்ற “ஏழைமை அதனால்” எனவும் உரைக்கின்றார். பவ நோயைப் போக்குதற்குத் தம்மாற் செயலாவது ஒன்றுமின்மையின், “என் செய்கேன்” என இரங்குகிறார். தன்னைத் தொழுவார் துயர் துடைத்து, ஆள வல்லவர் நின்னையன்றிப் பிறரில்லையென்று சான்றோருரைத்தலான், “என் பிழை பொறுத்துத் தளைத்த வன்துயர் நீத்தாள வல்லவர் நின்தனை யன்றி அறிந்திலேன் தமியேன்” என்றுரைக்கின்றார். “தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே” (வெண்ணெய்) என நம்பியாரூரர் நவில்கின்றார்.
இதனால், அறிவின்மையாற் செய்த பிழை பொறுத்தருளல் வேண்டுமென வேண்டிக் கொண்டவாறாம். (6)
|