629. சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
தேவனே தில்லைஅம் பலத்தே
தற்பர நடஞ்செய் தாணுவே அகில
சராசர காரணப் பொருளே
அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
அலைதரு கின்றனன் எளியேன்
கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
களிப்புடன் ஆடுவ தென்றோ.
உரை: பரஞானமாகிய சிவனே, தேவர்கட்கு கெல்லாம் தலைமைத் தேவனே, தில்லையிலுள்ள அம்பலத்தின்கண் தனிப் பரஞான நடம் புரியும் தாணுவே, உலகங்கள் அனைத்திலுமுள்ள சராசரம் அனைத்துக்கும் காரணப் பொருளாகியவனே, அற்பர்களிடம் செல்வதால் உண்டாகும் துன்பங்கள் பலவற்றால் எளியனாகிய யான் அலைந்து வருந்துகின்றேனாதலால், கற்பகம் போன்ற நினது திருவருளாகிய கடலிற் படிந்து மகிழ்ச்சி மிகுந்து ஆடுவது எந்நாளோ? எ.று.
பரஞானம் உருக் கொண்டாற்போல் சிவமூர்த்தம் விளங்குவது பற்றிச் “சிற்பர சிவனே” எனவும், தேவர்கள் அனைவர்க்கும் தலைவனாய், பிறர்க்கு இடர் நீக்குபவன் என்பதைப் புராணங்கள் எடுத்தோதுதலின் “தலைமைத் தேவனே” எனவும் உரைக்கின்றார். தில்லையம்பலத்தில் தனக்கே யுரிய தனிப்பெருங் கூத்தாடுவது பற்றித் “தில்லையம்பலத்தே தற்பர நடஞ்செய் தாணுவே” என்றும், சகல உலகங்களிலும் உள்ள நிலையியற் பொருளும் இயங்கியற் பொருளுமாகிய எல்லாவற்றுக்கும்நிமித்த காரண முதல்வனாதல் பற்றி, “அகில சராசர காரணப் பொருளே” எனவும் இயம்புகின்றார். பிரமனுக்கும் திருமாலுக்கும் உளதாய பிணக்கு நீக்குதற் பொருட்டு, ஆதியும் அந்தமு மில்லாத நெருப்புத் தூணாய் நின்ற சிவ மூர்த்தம் “தாணு” எனப்படும். “தாணுவாய் நின்ற பரதத்துவனை உத்தமனை இறைஞ்சீர்” (வீழி) என்று ஞானசம்பந்தர் உரைப்பது ஈண்டு நினைத்தற் குரியது. தம்பால் வருபவர்க்கு இயன்றது உதவி உடன் விடுத்தல் புல்லறிவாளர்க் கியல்பன்மையின், பற்பலகால் அலைத்து உதவாதொழிதல் அவர் செயலாதலால், அவர்பாற் பன்முறை சென்று ஊக்கமிழந்து சிறுமை யுற்றேன் என்பார், “அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன்” என்று வருந்துகின்றார். வேண்டுவார் வேண்டுவதீயும் இயல்பினதாதலால், இறைவன் திருவருளைக் “கற்பக மனைய நின் திருவருட் கடல்” என்கின்றார். கடலில் மூழ்கி முத்தெடுப்பார்போல, அருட் கடலில் மூழ்கி வேண்டுவன பெறலாம் என்பது கருத்து.
இதனால், ஈயாத புல்லரிடம் சென்று உற்ற இடும்பைக்கு அஞ்சியது உரைத்தவாறாம். (7)
|