63.

    தலனே யடியர் தனிமனமாம் புகழ்
        சார் தணிகா
    சலனே யயனரி யாதியர் வாழ்ந்திடத்
        தாங்கயில் வேல்
    வலனே நின்பொன் னருள் வாரியின் மூழ்க
        மனோலயம் வாய்ந்
    திலனேல் சனனமரண மென்னும் கடற்
        கென் செய்வனே.

உரை:

     புகழ் பொருந்திய தணிகை மலையை யுடையவனே, பிரமன் திருமால் முதலிய தேவர்கள் இனிது வாழ்தற் பொருட்டுக் கையிற் கூரிய வேற்படை யேந்துபவனே, அடியார்களின் மனமே கோயிலாகக் கொண்டவனே, நின்னுடைய அழகிய திருவருட் கடலில் மூழ்கித் திளைத்தற்கு இன்றியமையாத மனோலயம் பொருந்திலே னென்றால், பிறப்பு இறப்பு என்னும் கடலைக் கடத்தற்கு மாட்டேனாதலால், யான் என்ன செய்வேன், அறிவருள்க. எ. று.

     அடியார் தனி மனமாம் தலனே என்று இயைக்க, “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்” என்று சான்றோர் கூறுவ துண்மையால், “அடியார் மனமாம் தலனே” என்கின்றார். தலமாகக் கொண்டவன் என்பது தலன் என வந்தது. அடியார் மனம், இறைவன் திருவடி யொன்றே தன்பாற் கொண்டுள்ளமை பற்றித் “தனிமனம்” எனக் குறிக்கின்றார். அசுரரை மாய்த்து அமரர் வாழ்வுற வேல் வழங்கப் பெற்ற குறிப்புப் புலப்பட, “அயன் அரியாதியர் வாழ்ந்திடத் தாங்கயில் வேல் வலனே” என்று புகல்கின்றார். ஒன்றியிருந்து வழிபடுவார்க்கன்றி இறைவன் திருவருள் கைவராது என்பவாகலின், “நின் பொன்னருள் வாரியில் மூழ்க மனோலயம் வாய்ந்திலேன்” என்று கூறுகிறார். மனோலயம் - மனவொருமை. திருவருட் பேற்றாலன்றி வீடு பேறு எய்தாதாதலால், “சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே” என்று வருந்துகிறார். பிறப் பிறப்பறுவது என்பது வீடு பேறு.

     இதனால் மனோலயம் வாயாமை கூறி அதன் பொருட்டு அருள் புரிக என வழிபட்டவாறாம்.

     (63)