632.

     அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
          அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
     மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
          வானமும் தேடினும் இன்றே
     இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
          இணைதுணை எனநினைந் துற்றேன்
     மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
          வாழிய அருட்பெருந் துறையே.

உரை:

     திருவருள் பெருகும் பெருந் துறையாக விளங்குபவனே, அருள் புரிந்தாள்பவர், உன்னையன்றி இவ்வுலகத்திலும் மேலுலகமாகிய அவ்வுலகத்திலும் வேறு எவ்வுலகத்திலும் இல்லையானதுபோல் மலங் காரணமாக நலம் கண்டு மருள்பவரில் என்னைத் தவிர மண்ணிலும் விண்ணிலும் தேடினும் எவனுமில்லையாம்; மலவிருளால் பிறக்கும் விதி யுடையேனாதலின் இரண்டாய நின் திருவடியே துணையென நினைந்து நின் திருமுன் வந்துள்ளேன்; மருட்சியொடு கூடிய பிறப்பையும், அதனால் வரும் துன்பத்தையும், அவற்றை எண்ணுவதனால் வரும் அச்சத்தையும் போக்கியருளுக. எ.று.

     தன்போல் சத்தாயும் சித்தாயு முள்ள உயிரின்பால் பெருகிய திருவருளால் ஒன்றாயும் உடனாயும் கலந்து நின்று ஆண்டருளும் இறைவன் இயல்பை, “அருட் பெருந்துறை” எனவும், அலகில் பட அண்டங்களில் வாழும் அளவிறந்த உயிர்த்தொகை யனைத்தும், பெறற்கமைந்த அருளுருவாதலின் சிவனைப் “பெருந்துறை” யென்றும் சிறப்பிக்கின்றார். ஒப்பாரும் மிக்காருமில்லாத அருட்பெரு வள்ளல் என்பாராய், “அருள்பவன் நின்னை யல்லதை இங்கும் அங்கும் மற்றெங்கும் இன்று” என மொழிகின்றார். இனிமை இன்றென வந்தது, நன்மை நன்றென வருவதுபோல. மருட்சியும் பிறப்பும் தன்னைப் போலுடையார் கீழ்நிலையில் பிறர் எங்குமில்லை யென்பார், “மருள்பவன் என்னை யல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே” என்கின்றார். அல்லது அல்லதை என ஐகாரம் பெற்று வந்தது. இதனை ஐயீற் றுடைக் குற்றுகரம் என்பர் நன்னூலார். வினைத் திரிசொல் என்பதுமுண்டு. இருள் என்றது இங்கு மலவிருளை. அது பிறப்புக்குக் காரணமாதலின் “இருள் பவம்” என்கின்றார். “இருள் சேர் இருவினை” (குறள்) என்றாற் போல.

     இதனால், மருட்சி காரணமாகப் பிறக்கும் அச்சத்தின் நீக்கி யாண்டருளுமாறு வேண்டியவாறாம்.

     (10)