634.

     தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
          தோகையற் மயக்கிடை அழுந்தி
     ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
          என்செய்தால் தீருமோ அறியேன்
     வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
          மாமணிக் குன்றமே மருந்தே
     ஓங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
          யூர்வரும் என்னுடை உயிரே.

உரை:

     மேருமலையைப் பற்றி வில்லாக வளைத்திடுகின்ற பவளமாகிய பெரிய மணிமலையே, மருந்து போல்பவனே, உயர்ந்து வான் அளாவி நிற்கும் சோலைசெறிந்த திருவொற்றியூரில் எழுந்தருளும், என்னுடைய உயிர் போன்ற பெருமானே; பெருந்தூக்கம் உடையனானதோடு சோம்பலுக்கு உறைவிடமாகிய யான், மகளிர் நல்கும் காமமயக்கத்தில் மூழ்கி ஏக்கமுற்று வீணே இருந்தொழிந்தேன்; இதனால் எனக்கு எத்தகைய தண்டம் செய்தால் இக் குற்றம் நீங்குமோ, அறியேன். எ.று.

     தூங்குதல், உழைத்தற்குரிய காலத்தும் அதனைச் செய்யாது பெருந் தூக்கத்தில் ஆழ்ந்து கிடத்தலைக் குறித்தது. சோம்பல், மடிமை; உழைப்புக்கு வேண்டிய தெளிவும் அறிவும் இன்றிக் கிடத்தலைக் குறிக்கிறது. சோம்பலாகிய தீச்செயற்குத் தங்குமிடமாக யான் ஆயினேன் என்பாராய், “சோம்பற்கு உறைவிட மானேன்” என்று சொல்லுகின்றார். தோகை, ஆகுபெயராய் மயிலைக் குறித்தது. மயில் போன்ற சாயலுடைமை பற்றி மகளிரைத் “தோகையர்” என்கின்றார். தோகையர் மயக்கென்பது, மகளிர் கூட்டத்திற் பிறக்கும் காம மயக்கம். காம மயக்கத்தில் அழுந்தினார்க்கு வேறு துணையின்மையின் “ஏங்கினேன்” என்றும், அவ்வேக்கம் பயனுள்ள செயல் எதற்கும் பயன்படாமையால், “அவமே இருந்தனன்” என்றும், அவம் செய்தல் குற்றமாதலின், அக் குற்றம் தொலைதற்கு வழியறியேன் என்பாராய், “என் செய்தால் தீருமோ அறியேன்” என்றும் இயம்புகின்றார். வாங்குதல் - வளைத்தல். வளைத்தல் வினை மேலும் வருதலால், வாங்குதல், வளைத்தற்குப் பற்றுதல் மேலாயிற்று. பவளமும் மணிவகையுள் ஒன்றாதல் தோன்றப் “பவள மாமணி” என்றும், அதுபோல் நிறமும் தோற்றமும் கொண்டமையின் சிவனை “மாமணிக் குன்றே” என்றும் இசைக்கின்றார். மருந்தென்றது, தேவருண்ணும் அமுதத்தை. அது போன்றலின், சிவனை “அமுது” என்கிறார். கிழக்கில் மணல் பரந்த கடற்கரையும் மேற்கில் நன்செய் வளமும் பெற்றுச் சோலை சூழ்ந்திருக்கும் பொற்புத் தோன்ற, “ஓங்கி வான் அளவும் பொழில்செறி ஒற்றியூர்” என்று உரைக்கின்றார்.

     இதன்கண், “மயக்கிடையழுந்தி ஏங்கி அவமே யிருந்தனன்” என்பது அபராதம்; “என் செய்தால் தீருமோ” என்பது ஆற்றாமை.

     (2)