635.

     கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
          கடையனேன் விடையமே உடையேன்
     இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
          என்செய்தால் தீருமோ அறியேன்
     திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
          தெய்வமே தெய்வநா யகமே
     உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
          ஒற்றியூர் வாழும்என் உவப்பே.

உரை:

     நிலைத்த அருளாகிய செல்வமானவனே, சிவமே, தெய்வமே, தெய்வங்கட்கெல்லாம் தலைமைத் தெய்வமே, திண்மை யுடைய மெய்யன்பர் உள்ளத்தே ஒளிரும் ஒளிவிளக்கானவனே, திருவொற்றியூரில் உறையும் எனக்கு உவகையுருவாயவனே, உள்ளதை இல்லையென மறைக்கும் உலோபிகள் யாவருக்கும் முன்னணியில் நிற்கும் கொடுமையுடைய கடையவனும், புலனுகர்ச்சி யொன்றே பொருளெனக் கொண்டவனும், இரப்பவர்க்கு அணுவளவும் ஈயாதவனும் ஆகிய என்னை எங்ஙனம் ஒறுத்தால் என் குற்றம் அனைத்தும் நீங்குமோ, அறியேன். எ.று.

     திரம் - நிலைபேறு; உறுதியுமாம். ஏனைப் பொருட் செல்வத்தினும் அருட் செல்வம் அழியா நிலைமைத்தாகலின், அருளே உருவாய இறைவனைத் “திரப்படும் கருணைச் செல்வமே” என்றும், ஞானத் திரளாய் நின்ற பெருமானாதல் பற்றி, “சிவமே” என்றும் உரைக்கின்றார்.ஐம்முகமும், முக்கண்ணும், எண்டோளும் புலியதளுடையும் யானை யுரிப்போர்வையும், கையில் மழுவும் சூலப்படையும் கங்கை தங்கிய சடையும் பிறையும் பாம்பும் உடைய உருவினனாதல் பற்றி, “தெய்வமே” என்றும், ஏனைத் தெய்வங்களைப்போலச் செத்துப் பிறவா இயல்பு பற்றித் “தெய்வ நாயகமே” எனவும் விளம்புகின்றார். உரம், திண்மையான அறிவு. அதனால் உளதாவது சிவஞானம். சிவஞானமுடைய மெய்யன்பர்களின் உள்ளத்தைத் தூய கோயிலாகக் கொண்டு ஞானவொளி பரப்புதலின் “அன்பர் உள்ளொளி விளக்கே” என்று உரைக்கின்றார். ஒழியா ஞானானந்த வேதுவாதலை ஆனந்தமாகவே உபசரித்து “என் உவப்பே” என்று இயம்புகின்றார்.

     இதன்கண், கரப்பவருட் கொடியனும் கடையனும் பிறவுமாதல் அபராதம்; “என்செய்தால் தீருமோ” என்பது ஆற்றாமை.

     (3)