636.

     இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
          இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
     எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
          என்செய்தால் தீருமோ அறியேன்
     கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
          கண்ணுதல் உடையசெங் கனியே
     தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
          திருவொற்றி யூர்வரும் தேவே.

உரை:

     மேருமலையை வில்லாக வளைத்துக்கொண்ட கருணைக் கடலே, கண் பொருந்திய நெற்றியையுடைய சிவந்த கனி போன்றவனே, தில்லைப்பதியில் வாழ்கின்ற ஆடலரசே, தெய்வங்கட்கெல்லாம் பெரிய மணியாய் விளங்குபவனே, திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் தேவனே, உள்ளதனை இல்லையெனப் பொய்புகலுதற்கு அஞ்சேன்; நாய்க்கும் இணையாகாத கீழ்மையுடையேன்; இழிந்த பண்புடையேன்; யான் படும் துயரத்துக்கு ஓர் எல்லை கண்டிலேன்; ஒதி மரம் போன்ற என்னை எவ்வகையில் ஒறுத்தால் என் தீமை ஒழியுமோ, அறியேன். எ.று.

     கல், ஈண்டு மேருமலையைக் குறிக்கும். மலையைக் கல்லென்பது தமிழ் மரபு. “கல்லுயர் ஏறிக் கண்டனம் வருகம்” (குறுந். 275) எனவும், “பெருங்கல் நாடன்” (குறுந். 389) எனவும் சான்றோர் வழங்குவது காண்க. மலையை வில்லாக வளைக்கும் மறவனாயினும் உயிர்கள்பால் அருள் சுரப்பதில் கடல் போன்றவன் என்றற்குக் “கருணை வாரிதி” என்று இயம்புகின்றார். வாரிதி - கடல்; செம்மேனி யம்மான் எனப்படுவது பற்றி, “செங்கனி” என்று சிறப்பிக்கின்றார். நவமணிகளில் ஒன்றன்றெனற்குத் “தெய்வமாமணி” எனப் புகல்கின்றார். உள்ளதை இல்லெனல் பொய்யுரை; அதனை அஞ்சாமல் நாகூசாமல் மொழிவேன்என்பாராய், “இல்லை யென்பதனுக்கு அஞ்சிடேன்” என இயம்புகின்றார். நல்ல தவிசிட்டுக் கிடத்தினும் மலமே நாடிச் செல்லும் கீழ்மைச் செயல் உடைமை பற்றி, “நாய்க்கும் இணையிலேன்” எனவும், அதனினும் இழிந்த பண்புகள் தம்பால் உண்மை தெளிந்து கூறலால் “இழிவினேன்” எனவும் உரைக்கின்றார். இழி செயலே நினைத்தலும் செய்தலும் நாளும் புரிதலின் துன்பப்பயன் துதைந்து வருத்துவதறிந்து, “துயர்க்கோர் எல்லை மற்றறியேன்” எனவும், பயன்படுதல் இல்லாத ஒதி மரம் போல வளர்ந்திருக்கும் உடம்பின் பயனின்மை இனிது விளங்க “ஒதியனேன்” என்றும், தமது தீவினை செத்தாலும் விடாது தொடருமென்பதை யுணர்ந்து முறையிடுதல் வெளிப்பட, “என்னை என் செய்தால் தீருமோ அறியேன்” என்றும் இசைக்கின்றார்.

     இதன்கண், “இல்லை என்பதனுக் கஞ்சிடேன்” என்பது முதலியன அபராதமும், “என்னை யென்செய்தால் தீருமோ” என்பது ஆற்றாமை கூறுவதுமாம்.

     (4)