637. மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
மலரடி வழுத்திடச் சிறுதும்
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
விடையில்வந் தருள்விழி விருந்தே
கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
காட்சியே ஒற்றியங் கரும்பே.
உரை: ஞாயிறு திங்கள் விண்மீன் முதலாக வானத்தில் விளங்கும் ஒளிப் பொருள்களின் உள்ளொளியாய்த் திகழ்பவனே, விடையேறி வந்து அன்பர்க்கு அருட்பார்வை நல்கும் பெருமானே, கண்ணின் கண் விளங்கும் பெறற்கரிய மணிபோல்பவனே, அம் மணியினால் பெறலாகும் காட்சிப் பொருளே, திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் கரும்பு போன்றவனே, மண்ணக வாழ்வு தரும் சிற்றின்பத்தில் மயக்கமுறும் எளியேன் மனத்தை அதனினின்றும் மீட்டு உனது மலர் போலும் திருவடியைப் பரவுதற்குச் சிறிதுபோதும் எண்ணாத கொடிய ஏழை றேனாயினேன்; என்ன செய்தால் இத் தீமை நீங்குமோ, அறியேன். எ.று.
விண்ணில் விளங்கும் ஞாயிறு திங்கள் நாள் கோள், விண்ணிற் றோன்றும் தீ ஆகிய யாவும் ஒளியுடையவாய் விளக்கம் தருவன; இவற்றிற்கு உள்ளீடாய் ஒள்ளொளியாய் நின்று ஒளிரச் செய்பவனாதலால் சிவபெருமானை, “விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே” என்று கூறுகின்றார். ஞாயிறு முதலிய ஒளிப்பொருள் அனைத்திற்கும் இடம் விண்ணாதல் பற்றி, “விண்ணிலே விளங்கும்” என விளக்குகின்றார். நெருப்பும் ஒளிப்பொருளெனினும் அதற்குப் பிறப்பிடம் காற்று என்ப. மணிவாசகப்பெருமான், ஞாயிற்றிற்குச் சோதி தந்தவன் இறைவன் என்ற கருத்துத் தோன்ற, “அருக்கனிற் சோதி அமைத்தோன்” (அண்டப். 20) என்றாராயினும், உபலக்கணத்தாய் ஏனை ஒளிப் பொருட்கட்கும் ஒளி தந்தவன் இறைவனே என்பது பெறப்படுதலின், “விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே” என்பது பொருள் விளக்கம் செய்தவாறாயிற்று. சிவனைச் “சோதியாய்த் தோன்றும உருவம்” (கோயில்) என மணிவாசகப்பெருமான் கூறுதலால், ஒளிப் பொருள் அனைத்துக்கும் மூலகாரணம் சிவனாதல் அறியலாம். மெய்த் தொண்டர் பலர்க்கும் விடைமேல் வந்து சிவபோகப் பெருவாழ்வளித்தது தொண்டர் புராணத்தால் இனிதறியப்படுதலால், “விடையில் வந்தருள் விழி விருந்தே” என்று பாடுகின்றார். திருவருள் நாட்டம் புத்தின்பம் தந்து மகிழ்விப்பது பற்றி, “அருள் விழி விருந்து” எனச் சிறப்பிக்கின்றார். கண்ணில் விளங்கும் மணி பெறற்கருமையுடைமையால் “கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணி” என்றும், அம் மணியின்றேல் கண்ணுக்குக் காட்சித் தொழில் நிகழாமையால், மணியின் பெறலருமை கூறியதை யடுத்துக் “காட்சியே” என்றும் இயம்புகின்றார். இனிமை பற்றிச் சிவனைக் “கரும்பே” என்கின்றார். மண்ணக வாழ்வு கண் முதலிய கருவிகட்கும் கரணங்கட்கும் வேண்டும் போகங்களை நல்கிப் பிறவற்றை நினையாதவாறு மனத்தை மயக்குதலின், “மண்ணிலே மயங்கும் மனத்தினை” என்றும், ஞானம் துணையாக அதனை மீட்கும் நெறியின் அருமை புலப்பட, “மீட்டு” என்றும் இசைக்கின்றார். மீட்டல் அருமையை, “எண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணிலே யடியேன் வாழ்கிலேன் கண்டாய்” என்று திருவாசகம் கூறுவது காண்க. வாழ்வு தரும் மயக்கம் மனத்தினைப் பிணித்தலின் மலரடி எண்ணாமை யுளதாயிற் றென்றற்கு “மலரடி வழுத்திடச் சிறிதும் எண்ணிலேன்” என்றும், எண்ணாமை நேரிய வழியின்மையின் “கொடிய” என்றும், அதற்குக் காரணம் அறிவில்லாமை என்றற்கு, “ஏழையேன்” என்றும் உரைத்து, இக் குற்றத்துக்குத் தன்னையல்லது வேறு காரணம் இன்மையின் இதற்குக் கழுவாய் அறியேன் என்பாராய், “என்செய்தால் தீருமோ அறியேன்” என்று முறையிடுகின்றார்.
இதன்கண், மண்ணில் மயங்கும் மனத்தை மீட்டு இறைவன் மலரடி வழுத்த எண்ணாமை அபராதம்; என்செய்தால் தீருமோ என்றது ஆற்றாது கூறல். (5)
|