638. முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
மூடனேன் முழுப்புலை முறியேன்
எட்டியே அனையேன் பாவியேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடையுடைக் கனியே
காலமும் கடந்தவர் கருத்தே.
உரை: அன்பர்களின் உள்ளத்தின்கண் கலந்திருந்து வெளிப்படும் இன்ப வுருவே, ஒளிப் பொருள்கள் அனைத்திலும் உள்ளிருந்தொளிரும் காரண வொளியே, கரும்பின் சாற்றினால் செய்யப்பட்ட கட்டி போல்பவனே, தேனே, சடையையுடைய கனி போன்றவனே, காலம் கடந்த முனிபுங்கவர் திருவுள்ளக் கருத்துருவாகியவனே, மகளிரொடு கூடி அவர்களின் முலையிடத்துக் கிடந்து வருந்தும் மூடனாகிய யான் புலையுணவும் புலைவாழ்வு முடையனாய் அவற்றினின்றும் நீங்குதலை யறிகின்றிலேன்; எட்டி மரம் போன்ற யான் பாவமுடையேன்; என்னை எவ்வாறு ஒறுத்தால் என் குற்றமனைத்தும் ஒழியுமோ, அறியேன். எ.று.
அன்பர் உளத்து ஒட்டி எழும் களிப்பு என மாறுக. ஒட்டுதல் - ஒன்றித் தோன்றுதல். களிப்பு, ஈண்டு இன்பத்தின் மேனின்றது. மெய்யன்பருள்ளத்தில் சிவன் இன்பவடிவாய் விளங்குதல் பற்றி இங்ஙனம் கூறுகின்றார். ஒளிக்கெல்லாம் மூலகாரணனாதல் பற்றி, “ஒளிக்குளாம் சோதி” என உரைக்கின்றார். “உலகெலாம் சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுட் சோதியான்” (ஐயாறு) என்று சான்றோர் கூறுவது காண்க. சடையும் மேனியும் நிறத்தால் வேறுபடாமையின், “சடை யுடைக் கனியே” எனப் புகழ்கின்றார். முக்காலத்தையும் ஒப்பவுணரும் முழு ஞானிகளாதலால், முனிபுங்கவரை, “காலம் கடந்தவர்” எனக் குறிக்கின்றார்; கால வெள்ளத்தில் மாறாத நிலையினர் என்றற்கு இவ்வாறு கூறினர் என்றுமாம். உணர்வுடை நன்மக்கட்கு உணர்வுருவாய் விளங்குதல் தோன்றக் “கருத்தே” என்று கூறுகின்றார். “ஓதி நன்குணர் வார்க்குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ்சேர் ஒருவர்” (பாம்புரம்) என ஞானசம்பந்தர் நவில்வர். மடவார் முலைத்தலை முட்டி யுழக்கும் மூடனேன் என மாறுக. முலையிடத்துத் தலை வைத்துக் கிடந்து காம வெம்மையில் வருந்துமாற்றை இவ்வண்ணம் உரைக்கின்றார். இவ்வாறு கிடந்து வருந்தும் தலைவனைத் தோழி, “இவள் இடை முலைக் கிடந்தும் நடுங்கலானீர்” (குறுந். 178) என்பது காண்க. புலையுணவும், புலைத்தொழிலும் புரிவோர் முழுப்புலையர். அப் புலைத்தன்மை நீங்காமை விளங்க, “முழுப்புலை முறியேன்” என்று மொழிகின்றார். முறிதல், ஈண்டுத் தொடர்பற்று நீங்குதல் குறித்தது. விரும்பப்படும் தகுதியின்மை பற்றி “எட்டியே அனையேன்” என இயம்புகின்றார். எட்டி - எட்டிமரம்.
மூடத்தன்மையும் முழுப்புலை யியல்பும் எட்டி போலும் பான்மையும் பாவமும் உடையனாதல் இதன்கண் குறிக்கப்படும் அபராதம்; என் செய்தால் தீருமோ என்பது ஆற்றாமை. (6)
|