639.

     கருதென அடியார் காட்டியும் தேறாக்
          கன்மனக் குரங்கனேன் உதவா
     எருதென நின்றேன் பாவியேன் என்னை
          என்செய்தால் தீருமோ அறியேன்
     மருதிடை நின்ற மாணிக்க மணியே
          வன்பவம் தீர்த்திடும் மருந்தே
     ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
          ஒற்றியூர் மேவும்என் உறவே.

உரை:

     திருவிடை மருதூர்க்கண் நிலைபெற்றுள்ள மாணிக்கமணி போல்பவனே; வலிய பிறவிப் பணி நீக்கும் மருந்தொப்பவனே; ஒரு தலையாக உன்னைத் தம் மனத்துட் கொண்ட அன்பர்களின் உள்ளத்தின் கண் விளங்கும் ஞானவொளியே; திருவொற்றியூரில் எழுந்தருளும் எனக்கு உறவானவனே; மனத்தில் வைத்துப் பரவுக என மெய்யடியார் ஞான உரையாற் காட்டிய வழியும் தெளிவுறாத கன்மனமும் குரங்கு போன்ற அலையும் இயல்பும் பயன்படாத எருது போன்ற தன்மையும் கொண்டு நிற்கின்ற பாவம் உடையேன்; இப் பாவத்துக்கு என்னை என்ன செய்தால் அது தீருமோ, அறிகிலேன். எ.று.

     மருது எனப் பொதுப்பட மொழிந்தாராயினும் திருவிடை மருதே கொள்ளப்படுகிறது; அங்கே சிவபெருமானுக்கு மருத மாணிக்கன் என்று பெயர் வழங்குகிறது. “மருதிடம் கொண்ட மருதமாணிக்க” (திருவிடை, மும்ம) என்று பட்டினத்தார் குறிக்கின்றார். திருவிடை மருதூர்க் கல்வெட்டுக்களும் (s. i. i. vol. v. yo. 694) கூத்தப் பெருமானை “மாணிக்கக் கூத்தன்” எனவுரைக்கின்றன. இடையற வின்றித் தொடர்தலின், பிறவியை “வன்பவம்” என்றும், பிணியாய்த் துன்பம் செய்தல் பற்றி அதன் தொடர்பறுத்தருளும் சிவனை, “வன்பவம் தீர்த்திடும் மருந்து” என்றும் கூறுகின்றார். சிவனையல்லது பிற தெயவங்களை உள்ளத்திற் கொள்ளாதவரை “ஒருதிறம் உடையோர்” எனவும், அப் பெருமக்கள் திருவுள்ளத்தில் ஞான வொளியாய்த் திகழுவது புலப்பட “உள்ளத்துள் ஒளியே” எனவும், அப்பனும் அம்மையும் மாமனுமாமியும் எனப் பல்வேறு உறவு கற்பித்துப் போற்றப் படுதலின் “என் உறவே” எனவும் இயம்புகின்றார். மெய்யுணர்ந்த சிவனடியார் திருவடியின் பெருமையையும் அதனை யடையும் நெறியையும் இனிதுணர்த்தி மனத்தால் நினைத்துக் காண் என்று காட்டிய திறத்தைக் “கருதென அடியார் காட்டியும்” என்றும், காட்டக் காணாது தீ நெறிப்பட்டுப் பாவம் பல செய்து குற்றப்பட்டமையும், அதற்கு ஏதுவாக மனம் இரக்கமும் தெளிவுமின்றிக் கெட்டிருந்த நிலையை, “தேறாக் கன்மனக் குரங்கனேன்” என்றும் கூறுகின்றார். மனநிலை மாறுபடினும், உலகியலை நோக்கிப் பிறர் உதவி வேண்டித் தான் உதவுவது முறையாய் இருக்க அதனைச் செய்யாது பயன்படாதிருந்தமை தோன்ற, “உதவா எருதென நின்றேன்” என்றும், இவ்வகையாற் பாவம் பல செய்துள்ளமை விளங்கப் “பாவியேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண் தேறாக் கன்மனக் குரங்கே்னன் என்றும், உதவா எருது என்றும், பாவியேன் என்றும் விதந்தோதியது அபராத மிகுதியையும், என் செய்தால் தீருமோ என்றது ஆற்றாமையையும் குறித்தவாறு.

     (7)