64. என்செய்கை என்செய்கை எந்தாய்நின்
பொன்னடிக்கே யலங்கல்
வன்செய்கை நீங்க மகிழ்ந்தணியேன் துதி
வாயுரைக்க
மென்செய் கைகூப்ப விழிநீர் துளித்திட
மெய் சிலிர்க்கத்
தன்செய்கை என்பதற்றே தணிகாசலம்
சார்ந்திலனே.
உரை: எந்தையாகிய முருகப் பெருமானே. நின்னுடைய தணிகை மலையை அடைந்து பணிந்தேனில்லை; என்னுடைய வன்செயல்கள் கெடும் பொருட்டு என் செயல் என்ற உணர்வற்று, வாய் நினக்குரிய துதிகளைச் சொல்ல மென்மையமைந்த கைகள் தலையிற் குவிய, கண்கள் அன்பு நீர் துளிக்க, மெய்ம்மயிர் பொடிக்க நின்னுடைய அழகிய திருவடிகட்கு மன மகிழ்வுடன் மாலை அணிந்தேனில்லை; வேறே யான் செய்த செய்கைகள் என்ன பயனைச் செய்வனவாம், எ. று.
எந்தாய், தணிகாசலம் சார்ந்திலன்; வன்செய்கை நீங்க, தன் செய்கை யற்று, வாய் துதி யுரைக்க, கை கூப்ப, விழி நீர் துளித்திட, மெய் சிலிர்க்க நின் பொன்னடிக்கு மகிழ்ந்து அலங்கல் அணியேன்; என் செய்கை என் செய்கையாம் என இயைத்துக் கொள்க. சார்தல் பணிதற் பொருட்டாதலின், சார்ந்து பணிந்திலேன் என்பார், “தணிகாசலம் சார்ந்திலன்” என்று கூறுகின்றார். மன மொழி மெய்களால் முருகனை நினைந்து துதி யுரைத்து வணங்கி வழிபடுதலொழியப் பிறவெல்லாம் பொருந்தாத வன்செயல்கள் என்பார், “வன்செய்கை நீங்க” எனக் குறிக்கின்றார். மென் செய் கை - மென்மை சான்ற கைகள். தலை மேற் கை குவித்தல் வழிபாட்டுக் குறிப்பாதல் பற்றி, “மென்செய் கைகூப்ப” என்கின்றார். அன்பால் உள்ளம் உருகுங்கால் கண்களில் நீர் சுரந்து துளித் துளியாகச் சொரிதல் இயல்பாதலால் “விழிநீர் துளித்திட” என்று கூறுகின்றார். நீர் துளித்திட என்பன எழுவாயும் பயனிலையுமாய் இயைந்து ஒரு சொன்னீர்மை யுற்று விழிக்குப் பயனிலையாயின. மெய் சிலிர்த்தல் அன்பு மேலீடு. யான் செய்தேன், என் செயல் என்ற உணர்வற்ற போது முருகன்பால் உளதாகும் உள்ளத் தோய்வு உண்மையும் உறுதியும் பெறுதலால் “தன் செய்கை என்பது அற்று” என்று சாற்றுகின்றார். தன் செய்கை என்பது அற்ற போது செயற்படுவன அனைத்தும் இறைவன் செயலாம்; “நம் செயலற்றிந்த நாமற்ற பின் நாதன், தன் செயல்தானே என்றுந்தீபற, தன்னையே தந்தானென் றுந்தீபற” (திருவுந்தி) என உய்ய வந்த தேவ நாயனார் உரைப்பது காண்க. தன் செய்கை என்பது அறாத மனத்தோடு செய்வன பயனில்லனவாதலால், “என் செய்கை என் செய்கை” என்று இயம்புகின்றார்.
இதனால், நான் எனதென்பதற்றுத் தணிகாசலனை வழிபட்டு அவன் திருவடிக்கு மகிழ்வுடன் மாலை யணிந்து பரவுதல் வேண்டுமெனத் தெரிவித்தவாறாம். (64)
|