640.

     வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
          வஞ்சனேன் நின்னடி யவர்பால்
     எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
          என்செய்தால் தீருமோ அறியேன்
     கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
          கோலநெஞ் சொளிர்குணக் குன்றே
     உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
          யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.

உரை:

     அழகிய மலர்களைக் கொய்து சொரிந்து அருச்சனை புரியும் மெய்யன்பர்களின் தூய நெஞ்சின்கண் தங்கி அருள் ஒளி செய்யும் குணக்குன்றாகிய சிவனே! உய்தி பெறும் நல்லோர் வழிபடும் திருவொற்றியூர்க்கண் விரும்பியுறையும் ஒரு பரம்பொருளே! நின் திருவடியை வணங்காமல் புறக்கணிப்பவரைக் கண்டு நான் ஒன்றும் வெறுத்துரைத்ததில்லை; வஞ்ச மனத்தனாகிய யான் நின் திருவடியை நெஞ்சிலே யுடைய பெரியோரிடம் அடைந்ததில்லை; யான் பேய்த் தன்மையும் அறிவின்மையும் உடையேன்; இத்தகைய குற்றங்கட்காக என்னை எவ்வாறு ஒறுத்தால் பாவம் தீருமோ, தெரியவில்லை. எ.று.

     மாமலர், புதுமையும் நன்மணமும் உடைய பூ. அலர்ந்த புதுமை குன்றாமுன் பறித்து அருச்சித்தல் வழிபாட்டு நன்னெறியாதலின், அங்ஙனம் வழிபடும் நல்லோர்களை, “மாமலர் கொய்து இட்டு அருச்சனை புரிவோர்” எனவும், அவருடைய நெஞ்சம் தூய்மையால் அழகு மிக்குப் பொலியுமாறு விளங்கக் “கோல நெஞ்சு” என்றும், அத்தகைய நெஞ்சையே சிவன் கோயிலாகக்கொண்டு எழுந்தருளி, அருள் ஞானவொளி செய்வது தோன்ற, “நெஞ்சு ஒளிர் குணக்குன்றே” என்றும் கூறுகின்றார். குணமென்னும் குன்றின்மேல் வீற்றிருக்கும் குறிப்பு விளங்க, “குணக்குன்றே” என்றும் இயம்புகின்றார். தீநெறி பற்றிக் கெடுவார் போலின்றி, சிவநெறி பற்றி இன்பவாழ்வு பெற முயல்வோரை “உய்திறம் உடையோர்” எனவும், தமது முயற்சி கைகூடற்கு அவர்கள் திருவொற்றியூர்த் தியாகப் பெருமானை வழிபடுவது புலப்பட, “பரவும் நல்ஒற்றியூரகத்து அமர்ந்தருள் ஒன்றே” எனவும் பராவுகின்றார். பதிப் பொருள் வகையில் ஒன்றாய்த் திகழ்வதால் “ஒன்றே” என்பர். கொடுப்பவரைப் புகழ்வதும் கொடாதவரை இகழ்வதும் உலகத்து மக்கள் இயல்பு. அதனால் அவர்கள் இறைவன் திருவருள் எய்தியவழி அவனைப் பரவுவதும், எய்தாவிடத்து இகழ்வதும் செய்வர். இந்த அடிப்படை யியல்பில் இறைவனதுண்மை யுணர்ந்தும் வணங்காது இகழ்பவர் உளர்; வணங்கி வழிபடுவோருட் பலர்க்கு இறையை வணங்காதவரினும் வணங்காது இகழ்பவரைக் காணின் வெறுப்பும் வெகுளியும் தோன்றி அறிவை அலைக்கும்; அவர்களும் வெகுண்டு வசைச் சொற்களால் இகழ்வர்; வைதலும் செய்வர்; அதனாற்றான், “வைதிலேன் வணங்காது இகழ்பவர் தம்மை” என்றும், அஃது ஒருவகையில் வணங்காது இகழ்பவரை ஊக்குவதாய் முடிதலின், அதனால் “தம்மை வஞ்சனேன்” என்றும் உரைக்கின்றார். மனத்தினும் செயலினும் சொல்லினும் தவறுண்டாதற்குரிய காரணம் பலவற்றினுள் சிற்றினச்சூழல் ஒன்று. அதனை விலக்கற்குச் சிவஞானிகளான அடியார் கூட்டத்தை யடைந்திருத்தல் வேண்டும் என்று பெரியோர் உரைப்பர்; யான் அது செய்திலேன் என்பாராய், “நின்னடியவர்பால் எய்திலேன்” என்றும், அதற்குக் காரணம் நிலையின்றி எங்கும் அலைந்த வண்ணமிருக்கும் பேயின் தன்மை என்பால் உளது என்பாராய், “பேயேன்” என்றும், இவற்றிற் கெல்லாம் ஏது திண்ணிய அறிவின்மை எனற்கு “ஏழையேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், இகழ்பவர் தம்மை வைதிலேன் என்பதுமுதல் ஏழையேன் என்ப தீறாகக் கூறுவன அபராதம்; “என்செய்தால் தீருமோ அறியேன்” என்பது ஆற்றாமை.

     (8)