642. வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
வஞ்சக மனத்தினேன் பொல்லா
ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
என்செய்தால் தீருமோ அறியேன்
போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
புனிதமே புதுமணப் பூவே
பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
பாதுகாத் தளிப்பதுன் பரமே.
உரை: ஞானமே வடிவாக உள்ளவனே; ஐவகைப்பட்ட பூதங்களாக இருப்பவனே; நீங்காத தூய்மையின் உருவமே; புதுமணம்பரப்பும் பூப்போன்ற உன் திருவடியே எனக்குப் புகலிடமாம்; ஆதலால் என்னைப் பாதுகாத்தருளுவது உனக்குக் கடனாகும்; ஆனால் யானோ, எது சொன்னாலும் தருக்கவாதமே செய்யும் இயல்பினேன்; அச்செயலில் கொடிய புலியையும் ஒத்தவன்; வஞ்சம் நிறைந்த மனம் உடையவன்; பொல்லாத குற்றங்கள் அத்தனையும் உடையேன்; இதனால் என்பால் நிறைந்துள்ள குற்றங்களைப் போக்குதற்கு வேறு செயல் இல்லேன். எத்தகைய தண்டனை பெற்றால் இப் பாவம் தீருமோ; அறியேன். எ.று.
போதம் - ஞானம். இறைவன் ஞான வடிவினனாதலின் “போதமே” என்று புகல்கின்றார். நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்ற ஐவகைப் பூதங்களும் இறைவன் வடிவம் என்பது பற்றி, “ஐந்தாம் பூதமே” என்று உரைக்கின்றார். “இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியும் காற்றுமாகி” எனவரும் திருத்தாண்டகம் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றது. இப் பூதங்கள் தோறும் கலந்து நின்றாலும் இறைவனுடைய தூய்மை கெடுவதில்லாமை பற்றி “ஒழியாப் புனிதமே” என உரைக்கின்றார். புதுமணம் பரப்பும் நாள்மலர் போல ஞான மணம் பரப்பி மலரினும் மெல்லிதாய் விளங்குதல் பற்றி, சிவபெருமான் திருவடியை, “புதுமணப் பூவே பாதமே” என்று போற்றுகின்றார். சரணம் - புகலிடம். பரம் என்பது கடமை என்ற பொருளில் வருகிறது. காப்பது உன் பரம் என்பது, காப்பாற்றுவது உன் பாரம் எனவும் வழங்கும். யாவர் யாது கூறினும் மாறுபட்டு மறுத்துப் பேசுவது தமக்கு இயல்பாக உளது என்பாராய், “வாதமே புரிவேன்” என்றும், அச் செயலில் தோல்வி எய்தும் நிலை வரின் சினம் மிகுந்து ஆள் மேல் பாய்ந்து அல்லது செய்யும் கொடுமை உண்டு என்பதை, “கொடும்புலி அனையேன்” என்றும், நேர்மைக்கு மாறாவன நினைந்து செய்வதும் மொழிவதும் நினைந்து, “வஞ்சக மனத்தினேன்” என்றும், பொறுத்தற்கரிய குற்றங்கள் செய்தமை இனிது விளங்க, “பொல்லா ஏதமே உடையேன்” என்றும் புகல்கின்றார்.
இதன்கண் வாதம் புரிதல், கொடும்புலி நிகர்த்தல் முதலாகக் கூறியன அபராதம்; என்செய்தால் தீருமோ அறியேன் என்பது ஆற்றாமை. (10)
|