8. காட்சிப் பெருமிதம்

திருவலிதாயம்

    சென்னையிலிருந்து வடதிருமுல்லை வாயிற்குச் செல்லும் வழியில் இடையில் உளது திருவலிதாயம் என்னும் திருப்பதி. விண்ணப்பக் கலிவெண்பாவில் வள்ளற் பெருமான், “ஊற்றுறு மெய்யன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் இன்பமிகு ஞான விலக்கணமே” (260) என்று சிறப்பிக்கின்றார். இவ்வூரை, இந்நாளிற் பாடி என்று வழங்குகின்றார்கள். திருஞானசம்பந்தர் ஒரு திருப்பதிகம் பாடி வணங்கலுற்று, இங்கே நாட்டு மக்கள் வந்து பணிந்து பிணி தீர்ந்து உய்தி பெறுவது கண்டு, “வையம் வந்து பணியப் பிணிதீர்த் துயர்கின்ற வலிதாயம்” என்றும், “உடலிலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத்துயர் போமே” என்றும் பாடிச் சிறப்பிக்கின்றார். இப் பதியின்கண் மந்தி வந்து கடுவனொடும் கூடி சிவனை வழிபடுவது ஞானசம்பந்தர்க்குப் பெரு மகழ்ச்சி தந்துள்ளது. கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில், திருவலிதாயமுடையார் கோயில் இருக்குமிடம் தீன சிந்தாமணிபுரம் என்றும் ஒரு பகுதி பாடி என்றும் வழங்கின (218 / 1910) : கி. பி. 1548ல் எழுந்த இவ்வூர்க் கல்வெட்டு (220 / 1910) இவ்வூரைப் பாடி திருவலிதாயம் என வழங்குகிறது. இதனால் இவ்வூரைப் பாடி என்னும் வழக்கும் மிகவும் பழமையானதென்று தெரிகின்றோம். முதல் இராசராசன் காலத்தில் திருவலிதாயம் திருவலிதாயில் என வழங்கி (227 / 1910) பின் பார்த்திவேந்திரவன்மன் காலத்தும் (225 / 1910) அதுவே தொடர்ந்து நிலவியுளது. தி்ருவலிதாயமுடைய பெருமானுக்குத் திருவல்லிகேசன் என்ற பெயர் வந்த வரலாறு தெரியவில்லை.

    வள்ளற் பெருமான் திருவலிதாயம் சென்று அங்குள்ள சிவபெருமானைக் கண்டு இன்புறுகின்றார். வலிதாயத்து இறைவனது அருட்காட்சி, வள்ளலார் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியும் வியப்பும் தந்து இன்பத்தில் ஆழ்த்துகிறது. சிவனது திருமேனியிற் சென்ற காட்சி அரையிற் கோவணமும் கீளும் கண்டு உலகனைத்தும் படைத்தாளும் பெருமான் இந்த உடையில் இருப்பதோ என்று எண்ணத் தூண்டுகிறது. முன்னாளில் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் திருவுள்ளத் தெழுந்த இத்தகைய வியப்பு வள்ளலார் உள்ளத்திலும் எழுகிறது. அதனால் இப் பத்தினைப் பாடியருளுகின்றார். சிவமூர்த்தியின் அழகிய காட்சியில் கந்தையுடை கிடந்து வியப்புப் பயப்பது ஒருபுறமிருக்க, அதன்கண் ஊறும் அருளின்பம் பெருகிப் பெருமிதம் தருதலால் காட்சிப் பெருமிதம் என்ற தலைப்பில் இப் பாட்டுக்களை அருளுகின்றார்.

643.

     திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
     உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
     வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
     தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.

உரை:

     அலை சுருட்டுவதில்லாத செழுமையான கடல் போன்றவனே, உரைகல்லால் சிறிதும் மெருகேற்றாமலே ஒளிதிகழும் பொன் போன்றவனே, வரையறை யன்றிப் பரவி வளரும் திருவலிதாயத் துறையும் வல்லிகேசப் பெருமானே, நீ மண் புழுதி பட்ட கந்தை யாடையை இடையில் அணிந்து கொள்வது எக்காரணத்தாலோ, அறியேன். எ.று.

     பேரலைகள் எழுந்து நுரை சுமந்து சுருண்டு வீழுதல் இல்லாத அமைதி சான்ற சிவத்தின் செம்மை நிலையை வியந்து “திரைபடாத செழுங்கடலே” என்று சிறப்பிக்கின்றார். உரை கல்லால் தேய்த்து மெருகேற்றுவதால் பொன்னுக்கு ஒளி மிகுவது இயல்பாதலால், அதனின் விலக்குதற்குப் பொன்னிறமுடைய சிவபிரானை, “உரை படாமல் ஒளிசெய் பொன்னே” என்று உரைக்கின்றார். உலகில் மக்கள் செய்யும் புகழுக்கு எல்லை அவர் வாழும் உலகு. ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும். சிவன் புகழுக்கு ஆதாரம் சிவனே யாதலால் “புகழ் வரைபடாது வளர் வல்லிகேச” எனப் புகல்கின்றார். வரைதல் - எல்லைப்படுதல். வரம்பில் செயலும் வரம்பில் ஆற்றலும் உடையனாதலால், அவற்றால் சிவபிரானுக் கெய்தும் புகழும் வரம்பில்ல தாதலின், புகழ் வரைபடாது வளர்வது முறையாயிற் றென அறிக. வலிதாயப் பதியுடையானை “வல்லிகேசன்” என்று பெயரிட்டவர் வட மொழியோ தமிழோ அறியாத பேதைச் சிவப்பிராமணர்கள். அவர் உரைக்கும் வடமொழிப் பெயர்கட்கோ புராணங்கட்கோ சீரிய பொருள் இல்லாமை அறிதல் வேண்டும். தரைபடாக் கந்தை - நி்லத்து மண் புழுதியால் அழுக்குறாக் கந்தைத் துணி. எல்லாவுலகுகட்கும் தெய்வங்கட்கும் மேலாய பரமசிவன் பொன்னாலும் பட்டாலும் ஆய தூய உயரிய ஆடையணியாமல் கந்தை யுடுப்பது வள்ளலார்க்கு மிக்க வியப்பைத் தருதலின், “கந்தை சாத்தியது என் கொலோ” என்று வினவுகின்றார். இவ்வாறே ஞான சம்பந்தரும், “சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீள் உடையும் கொண்ட உருவம் என் கொலோ” என்று சிவனை வியந்து கேட்பது காணலாம்.

     இவ்வியப்புமிகு வினாவே வரும் திருப்பாட்டு ஒவ்வொன்றிலும் காணப்படுவது அறிக.

     (1)