645.

     வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
     மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
     பாலை கொண்ட பராபர நீபழஞ்
     சேலை கொண்ட திறம்இது என்கொலோ.

உரை:

     கடலைக் கடைந்த விடத்துப் போந்த நஞ்சினை யுண்ட கழுத்தையுடையவனே, மலர் மாலை யணிந்த அருள் வளரும் வல்லிகேசன் என்ற பெருமானே, ஆண் பெண் எனப் பாகுபடுதலை யுடைய மேனி பொருந்திய பராபரனே, நீ பழையதாகிய கந்தை யாடையை இடையில் அணிந்துகொண்ட செயலாகிய இது என்னையோ, கூறுக. எ.று.

     வேலை - கடல். தேவர்கள் அமுதம் வேண்டிக் கடலைக் கடைந்த போது அதன்கட் பிறந்த நஞ்சினைச் சிவபெருமான் ஏற்று உட்கொண்டதனால் கறுத்த கழுத்தை யுடையனானது பற்றி, “வேலை கொண்ட விடமுண்ட கண்டனே” என விளம்புகின்றார். மாலையெனப் பொதுப்பட மொழிந்தமையின் கொன்றை மாலையே கொள்ளப்படும். சிவன்பால் திருவருள் பெருகிய வண்ணம் இருப்பது கொண்டு “வளர்வல்லி கேசனே” என்று இசைக்கின்றார். வலிதாயந் துறையும் ஈசனுக்கு வல்லி கேசன் என்பது பெயர். பால் - பகுதி. ஆண்பால், பெண்பால் என வருவனவாகிய கூறு இரண்டு கொண்ட பெருமானாதலால், “பாலை கொண்ட பராபர” என்று பாடுகின்றார். யாவர்க்கும் எப்பொருட்கும் மேலாயவனும் கீழாயவனும் சிவனாதலால் “பராபரம்” என்று கூறுகின்றார்.சேலை - உடை. பழைதாகிய உடையே கிழிந்து கந்தலாகுமாதலால், கந்தலுடையைப் “பழஞ்சேலை” என்று குறிக்கின்றார். கந்தலாடையைச் சிவன் இடையில் அணிந்திருப்பது மிக்க வியப்பைத் தருவதால், “பழஞ்சேலை கொண்ட திறம் என்கொலோ” என வினவுகின்றார்.

     (3)