646. பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
மன்னும் மாமணி யேவல்லி கேசனே
உன்ன நீ இங் குடுத்திய கந்தையைத்
துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
உரை: திருப்பெயரைப் பன்முறையும் ஓதுபவர்க்கு அருள்செய்யும் பரமேட்டியே, நிலைத்த பெரிய மணி போல்பவனே, வலிதாயத்துறையும் பெருமானே, பரஞ்சோதியே, கண்டார் என்னையோ என நினைக்குமாறு நீ இங்கே உடுத்திருக்கின்ற கந்தை யாடையை உன் பொருட்டுத் தைத்துக் கொடுக்கும் அன்பர் இல்லையோ, கூறுக. எ.று.
பன்னுவார் - பன்முறையும் கூறுபவர். ஒன்றைப் பன்முறையும் பேசுவாரைப் பன்னிப் பன்னிப் பேசுகின்றார் என்பது வழக்கு. இறைவன் திருப்பெயரைப் பல்லாயிரக்கணக்கில் பன்னிப் பன்னி ஓதும் சமய மரபை ஒட்டி இவ்வாறு உரைக்கின்றார். பரமேட்டி - மேம்பட்ட பொருளாக மதிக்கப்படுவன். மன்னுதல் - நிலை பெறுதல். மாமணி - பெரிய மாணிக்கமணி. சிவந்த பெரிய மாணிக்க மணிபோல விளங்குதலின் சிவனை “மாமணியே” என உரைக்கின்றார். சிவபெருமான் உடுத்திருக்கும் கந்தை ‘காண்பார் கருத்தில் வியப்பு மிகும் நினைவுகளை எழுப்புதலின், “உன்ன நீ இங்கு உடுத்திய கந்தை” எனச்சிறப்பிக்கின்றார்; உடுத்து என்றது உடுத்திய என வந்தது. உடை என்பது உண்ணிய என வந்தாற்போல. துன்னுதல் - தைத்தல். துன்னுவார், துன்னகாரர்; தையல்காரர் என இந்நாளில் வழங்குவர். பலவாய்க் கிழிந்திருப்பது பற்றித் “துன்னுவார் இல்லையோ” என்று வினவுகின்றார். (4)
|