647. கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
உரை: நஞ்சு பொருந்திய கழுத்தையுடைய அகண்ட சிவமே, மிக்குற்ற நல்ல புகழ் பொருந்திய வலிதாயத் திறைவனே, நீ இடையில் அணிந்துள்ள கந்தை யுடையைப் போக்கி, வேறு ஒரு துணியைக் கொண்டு உன்னை உடுத்துவார் இவ்வுலகில் இல்லையோ, கூறுக. எ.று.
கடு - நஞ்சு. நஞ்சின் கறை பொருந்தியது பற்றி, “கடுத்த தும்பிய கண்டனே” என்கின்றார். கண்டன் - கழுத்தையுடையவன். அகண்டன்.அளத்தற்கரிய பெரியவன். நல்ல புகழ் பொருந்தியது திருவலிதாயம் என்றற்கு “மடுத்த நற்புகழ் வல்லிகேச” என்று குறித்தருளுகின்றார். வல்லிகேசன், வலிதாயத்தில் கோயில் கொண்டருளுபவன். கந்தை - கந்தையுடை. துணிதல் - துண்டாய் அறுத்தல். உடுப்பிப்பார் உடுத்துவார் என வந்தது. இது செயப்படு வினையைச் செய்ததுபோலக் கிளத்தல். கந்தையுடுத்து இவ்வுலகில் எங்கும் எழுந்தருளுகின்றார். கந்தையுடையைப் போக்குவாரைக் கண்டிலேன் என்பாராய், “உடுத்துவார் இல்லையோ இவ்வுலகிலே” என உரைக்கின்றார். (5)
|