648.

     ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
     மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
     பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
     தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.

உரை:

     ஆலின் கீழ் உறையும் பரம்பொருளே, திருமாலைப் பாகத்தே கொண்டு மகிழும் வலிதாய நாதனே, நீ உன் அரையில் உடுத்த பழமையான கந்தையினும் தோலையுடுப்பது மிக்க தூய்மையான தாகும். எ.று.

     ஆலின்கீழ் வீற்றிருக்கும் பெருமானாதலின், “ஆலடுத்த அரும் பொருளே” என்று இயம்புகின்றார். ஆலின்கீழ் நால்வர்க்குப் பரம் பொருளின் பரமாம்தன்மையை அறிவுறுத்தியது பற்றி, “அரும் பொருள்” என்றாரென்றுமாம். நக்கீரர் சிவபெருமானை, “ஆல் கெழுகடவுள்” என்பர். மதுரையில் சொக்கநாதனை “ஆலவாயிற் சொக்கன்” என்பதும் இக்கருத்தே பற்றியாகும். சிவனுக்குத் தேவி திருமால் என ஆன்றோர் கூறுவதால் “திருமால் அடுத்து மகிழ் வல்லிகேச” என்று இசைக்கின்றார். பால் என்றது, அரையை. பழங்கந்தை மண்ணும் தூசும் படிந்து எளிதில் அழுக்குறும்; தோல் அன்னதன்று; அதனால் “பழங்கந்தையை விடத் தோல் உடுப்பதுவே மிகத்தூய்மை” என்று சொல்லுகின்றார்.

     (6)