649. துன்னும் மாமருந் தேசுடரே அருள்
மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
உரை: பிறவி நோய்க்குப் பொருந்திய பெரிய மருந்தே, சுடரே. அருள் நிலை பெற்ற மாணிக்கமே, வல்லிகேசுரனே, தைக்கப்படும் கந்தையை இடையில் அணிந்திருப்பீராயின், அருள் வேண்டி வரும் எமக்கு நீர் உதவுவது யாதாம்? எ.று.
துன்னுதல் - முன்னது பொருந்துவது என்றும், பின்னது தைப்பது என்றும் பொருள் தருவனவாம். பிறவிப் பிணியால் வருந்தும் உயிர்கட்கு மருந்தாய் ஞானமும் திருவடியும் நல்கும் சிறப்பு நோக்கி, “மாமருந்தே” என்றும், மல மறைப்பால் உண்டாகும் இருளைக் கெடுத்தலின் “சுடரே” என்றும் உரைக்கின்றார். செம்மேனி யம்மானாதலால் “மாணிக்கமே” என்றும், அதனிடத்தெழும் ஒளி அருள் மயமான தென்றற்கு “அருள் மன்னும் மாணிக்கமே” என்றும் எடுத்துரைக்கின்றார். திருவலி தாயமுடைய நாயனார் எனப்படும் ஏற்றம் பற்றி, “வல்லி கேசரே” என்று கூறுகின்றார். கந்தையாதலின் இடையில் உடுக்க வியலாமை பற்றி, “கந்தையைச் சுற்றிநிற் பீரெனில்” என்றும், தமக்கு உடுக்கப் போதிய உடையில்லாதவர் பிறர்க்கு எத்தகைய உதவியும் செய்ய வியலாமை கண்டு “நீர் எமக்கு ஈயும் பரிசு என்னவாம்” என்றும் இசைக்கின்றார்.
தாம் வீழ்வார் பிறர்க்கு ஊன்று துணையாகாமை போலத் தமக்குடுக்கத் துணியில்லாதார் பிறர்க்கு யாது உதவ வல்லார் என்பதாம். (7)
|