65. சாரும் தணிகையிற் சார்ந்தோய் நின்
தாமரைத் தாட்டுணையைச்
சேரும் தொழும்பர் திருப்பத மன்றியிச்
சிற்றடியேன்
ஊரும் தனமும் உறவும் புகழும்
உரை மடவார்
வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன்
மண் விண்ணிலே.
உரை: உயர்ந்தோர் வந்து பரவும் தணிகை மலையில் எழுந்தருளி யிருப்பவனே, நின்னுடைய இரண்டாகிய தாமரை போன்ற திருவடியை நினைந்து வழிபடும் தொண்டர்களின் திருவடிகளை யன்றிச் சிற்றியல்புகளையுடைய அடியனாகிய யான் ஊர்களும் செல்வமும் உறவினரும் புகழும் இன்னுரை பகரும் மகளிருடைய கச்சைப் பொருதெழும் முலையிடத்து இன்பமும் மண்ணும் விண்ணுமாகிய இரண்டு உலகத்திலும் பெற விரும்புகிறேனில்லை, எ. று.
பிரமன் முதலிய தேவர்களும் அகத்தியன் முதலிய முனிவர்களும் சீராமன் முதலிய மண்ணக வேந்தரும் வழிபட்ட தாகலின் “சாரும் தணிகை” என்று புகன்றுரைக்கின்றார். தாமரை மலர் போலும் திருவடியைத் “தாமரைத்தாள்” என்று சிறப்பிக்கின்றார். சேர்தல் - நினைந்து வழிபடுதல். தொழும்பர் - அடியவர். தொண்டர்க்குத் தொண்டராவது பெரிய சிவபுண்ணிய மாதலின் “தொழும்பர் திருப்பதம் அன்றி வேண்டிலன்” என்று கூறுகின்றார். சிற்றடியேன் என்பதில் சிறுமை, அடியவரது இயல்புகளின் சிறுமை குறித்தது. உண்பொருளாலும் உறையுளாலும் நலம் பயத்தலின், ஊரை முதற்கண் வைத்து உரைக்கின்றார். தனம் - பொன்னும் பொருளுமாகிய செல்வம். புகழ் - அறிவு ஆண்மை பொருள் படைகளால் உண்டாவது. சிலவாய மெல்லிய இனிய மொழிகளால் ஆடவர் மனங்களைக் கவர்க்கும் மகளிரை, “உரை மடவார்” என்றும், அவர்பாற் பெறலாகும் காம வின்பத்தை, “வார் உந்து அணி முலைப் போகம்” என்றும் மொழிகின்றார். கச்சுக்கு அடங்காது பூரித்தெழுவது பற்றி “வாருந்து அணி முலை” என்று குறிக்கின்றார். இப்போகம் மண்ணகத்தே யன்றி விண்ணுலகத்தும் உண்மையின், “மண் விண்ணிலே” என்கின்றார். ஊரும் தனமும் பிறவும் தரும் போகம் பிறப்புக் கேதுவாய்த் துன்பம் விளைவிப்பன என அறிக.
இதன் கண் மண்ணும் விண்ணுமாகிய உலகங்களிற் பெறும் போகத்தை வேண்டாது தணிகை முருகன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே வேண்டப்படுவதென்று காணலாம். (65)
|