650. மாசில் சோதிம ணிவிளக் கேமறை
வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
உரை: குற்றமில்லா ஒளி பொருந்திய மணிவிளக்காய்த் திகழ்பவனே, வேதமாகிய குதிரைமேல் இவர்ந்துவரும் வலிதாய நாதனே, நீர் உடையாகாத கந்தையை அரையிற் சுற்றிக்கொண்டு பரதேசிபோல இருக்கின்றீர்; ஐயோ, நான் என்ன செய்வேன்? எ.று.
சிவபிரான் மாணிக்கமணிபோல் விளங்குதலால் “மணி விளக்கே” என்கின்றார்: ஆயினும் மணியின்கண் எழும் ஒளியில் இருள் கலந்திருப்பதுபோலச் சிவன் திருமேனி யொளி இருள் கலவாத தூய வொளியாய்த் திகழ்வது புலப்பட, “மாசில் சோதி மணிவிளக்கு” எனப் புகழ்கின்றார். வேதத்தைக் குதிரையாகக் கொண்டு செலுத்துகிறான் சிவபெருமான் எனப் புராணம் கூறுதலால் “மறைவாசி மேவி வரும் வல்லிகேச” என்று கூறுகின்றார். வாசி - குதிரை. உடலில் நன்கு உடுக்குமளவிற்குள்ள உடையைத் தூசு என்பர்; அளவிற் குறைந்து துண்டு துண்டாய்க் கிழிந்த உடை கந்தையாதலால், “தூசில் கந்தை” என்றும், அஃது உடுக்கும் உடையளவிற் குறைந்திருத்தலால் அரையில் சுற்றிக்கொள்ள அமைவது கண்டு, “தூசில் கந்தையைச் சுற்றி” என்றும், வேற்று நாட்டு வறியவர்போல் தோன்றுதலால் மனம் நொந்து, “ஐயோ பரதேசிபோல் இருந்தீர்” என்றும் வள்ளலார் வருந்துகிறார். இது குறித்துத் தாம் ஒன்றும் செய்யமாட்டாமை நினைந்து “என் கொல் செய்வனே” என்று புலம்புகின்றார். (8)
|