651. தேரும் நற்றவர் சிந்தைஎ னும்தலம்
சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தி ரீர்
யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
உரை: மெய்ம்மை தெளியும் நல்ல தவம் புரிந்தோர் மன மென்னும் கோயிலைக் கொண்டமரும் நன்பொருளாய்த் திருவலிதாயத்தில் உள்ள பெருமானே, நீரே பாரும்; பழையதொரு கந்தையை அரையில் அணிந்துள்ளீர்; துணையாவார் ஒருவரும் இல்லாதவரோ? ஐயரே, நீர் சொல்லும். எ.று.
தேர்தல் - தெளிதல். மெய்ம்மை காணும் தவஞானப் பெருமக்களைத் “தேரும் நற்றவர்” என்றும், அவர் மனத்தைச் சிறந்த கோயிலாகக் கொள்வது மெய்ப் பொருளாகிய சிவனுக்கியல்பாதலின் “சிந்தையெனும் தலம் சாரும் நற்பொருளாம் வலிதாய” என்று சிறப்பிக்கின்றார். வலிதாயத் தலைவனை “வலிதாய” என்றும் குறிக்கின்றார். சிவன் இடையிற் கந்தை யுடுத்திருப்பதைக் காட்டிக் கூறுபவர் “நீர் பாரும் மற்று இப் பழங்கந்தை சாத்தினீர்” என்று சொல்லுகின்றார். கந்தையுடையைக் கண்டால் உறவினர் நண்பர் என்ற யாரும் மனம் பொறார்; ஒருவரும் உமக்கு இல்லையோ என்று கேட்பாராய் “யாரும் அற்றவரோ சொலும்” என மொழிகின்றார். கந்தையுடையராயினும் அழகும் தலைமையும் பெற்று விளங்குவதை இனிது காண்டலின் “ஐயரே” என உரைக்கின்றார். (9)
|