652.

     மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
     வல்லி தாயம ருவிய நாதனே
     புல்லி தாயிஇக் கந்தையைப் போர்த்தினால்
     கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.

உரை:

     மென்மையான நன்மணம் கமழும் பூப்போன்ற திருவடி களையுடையவனே, திருவலிதாயம் என்ற பதியில் எழுந்தருளும் நாதனே, அற்பமான இக்கந்தையுடையை அரையில் நீ உடுத்துக்கொண்டால் காண்பவர் நெஞ்சம் கற்போன்றதாயினும் நீராய்க் கரைந்துவிடுகிறது காண்க. எ.று.

     இறைவன் திருவடி மென்மையும் நறுமணமும் கொண்டமைபற்றி, “மெல்லிதாய விரை மலர்ப்பாதனே” என்றும், திருவலிதாயத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமை விளங்க, “வல்லிதாய மருவிய நாதனே” என்றும் உரைக்கின்றார். வலிதாயம் வல்லிதாயம் என எதுகை நோக்கி இரட்டித்தது. கந்தையாய்ப் புன்மைத் தனமை கொண்டது கண்டு’ “புல்லிதாய இக்கந்தையைப் போர்த்தினால்” என்றும், அது நல்கும் வறுமைத் தோற்றம் காண்பார் மனத்தைக் கலக்கிக் கரைக்கின்றது என்பாராய், “கல்லிதாய நெஞ்சம் கரைகின்றது” என்றும் இயம்புகின்றார்.

     இப்பாட்டுப் பத்தினும் சிவன் கந்தையுடைக் கோலத்தனாய்த் திரிவது கண்டு வடலூர் வள்ளல் மனம் கரைந்து பாடுகின்றார்.

     (10)