654. பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
புத்தமு தேமறைப் பொருளே
வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
தீங்கொடி யாத வினையனேன் எனினும்
செல்வநின் கோயில்வந் தடைந்தால்
ஈங்கொடி யாதஅருட்கணால் நோக்கி
ஏன்எனா திருப்பதும் இயல்போ.
உரை: அழகிய கொடி போன்ற இடையை யுடைய உமாதேவியைக் கூடிய சிவந்த தேன் போன்றவனே, புதிது பெற்ற அமுத மானவனே, வேதப் பொருளாகியவனே, தாவுகின்ற கொடியில் விடை கொண்ட அண்ணலே, முல்லைவாயிற் பதியில் எழுந்தருள்கின்ற மாசிலா மணியே, தீமை குன்றாத வினைகளை யுடையவனெனினும் திருவருட் செல்வனாகிய நின் கோயிலை வந்தடைந்தபோது, இவ் விடத்தே நீங்காத அருணிறைந்த கட்பார்வை செய்து வந்த காரணம் என்னை என்று கேளாதிருப்பது நினக்கு நல்லியல்பாகுமோ, கூறுக. எ.று.
பூங்கொடி - அழகிய கொடி; பூக்கள் மலர்ந்துள்ள கொடி யென்றுமாம். கொடியிடை என்பது அன்மொழித் தொகையாய்ப் பார்வதியம்மை மேற்று. உலகுயிர்கள் உய்தல் வேண்டி உமை நங்கையைச் சிவன் மணந்து கொண்டமையின், “பூங்கொடி யிடையைப் புணர்ந்த செந்தேனே” என்று புகல்கின்றார். பூவும் தேனும் போலத் தேவியும் தானுமாய் இயைந்திருப்பதுபற்றிப் “புணர்ந்த செந்தேனே” என்கின்றார். செம்மை நிறமும் ஞான வின்பமும் உடைமைபற்றி, “செந்தேனே” எனல் அமையும் என அறிக. எஞ்ஞான்றும் புதுமை குன்றாத இயல்பு கண்டு “புத்தமுதே” எனவும்,ஞான நூல்களின் பொருளாயவனாதலால் “மறைப்பொருளே” எனவும் உரைக்கின்றார். வாம் - கொடி; காற்றில் தாவியசையும் கொடி. எருதின் வடிவெழுதிய கொடியுடைய தலைவன் என்பது கொண்டு சிவனை, “வாங்கொடி விடைகொள் அண்ணலே” எனவும், வடதிருமுல்லை வாயிற்பகுதியில் மாசிலாமணி என்ற பெயருடன் எழுந்தருளியிருப்பதுபற்றி, “முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே” எனவும் இயம்புகின்றார். தீங்கு ஒடிதல் - தீங்கு இல்லாமற் கெடுதல். தீ வினையுடையேன் என்பார், “தீங் கொடியாத வினையினேன்” எனத் தெரிவிக்கின்றார். ஈசன் என்ற சொல்லுக்குப் பொருள் செல்வனென்பதாகலின், செல்வ என்றும், சிவனுக்குரிய செல்வம் திருவருளாதலின், அருட் செல்வனென்றும் சொல்லுகின்றார். தீவினையுடைமையால் திருக்கோயில் வந்தடையேன், நல்லூழால் வந்தடைவேனாயின், எளியேனை வருக எனச்சொல்லி அழைத்தருளாது வாய் வாளாதிருப்பது அருளாளனாகிய நின் இயல்புக்கு ஆகாது காண் என்பாராய், “அருட்கணால் நோக்கி ஏன் எனாதிருப்பதும் இயல்போ” என்று வினவுகின்றார். ஒடியா அருள் - குன்றாத அருள்; “கடிமலர் கருவிய ஒடியா வாசம்” (56) என ஞானாமிர்தம் வழங்குவது காண்க. (2)
|