655. துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
சுந்தரா சுந்தரன் தூதா
மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
அறிவிலேன் எனினுநின் கோயிற்
கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
திருப்பதுன் திருவருட் கியல்போ.
உரை: பவளம் போன்ற வாயிதழை யுடைய உமாதேவியை மணந்த கல்யாண சுந்தரப் பெருமானே, நம்பியாரூரனாகிய சுந்தரர்க்குத் தூது சென்ற பரமனே, நஞ்சின் கறை படிந்த கழுத்தை யுடையவனே, திருமிகும் முல்லைவாயிற் பதியில் உள்ள மாசிலா மணியே, அப்பனே, யான் உன்னை விடுவேனல்லேன்; அடியனாகிய யான் மெய்யறிவில்லாதவனே எனினும், நினது திருக்கோயிற்கு வந்தடைந்தேன்; தளர்ச்சியுடன் வந்த என்னை வருக என்று ஒரு சொல் கூறாமல் இருப்பது உனது திருவருட்கு ஏற்ற தன்மையாகுமா? எ.று.
துப்பு - பவளம். மகளிர் வாயிதழ்க்குப் பவளத்தை ஒப்புக் கூறுவது மரபாதலின், உமாதேவியை, “துப்பு - நேர் இதழி” எனப் புகழ்கின்றார். உலகறிய மணந்துகொண்ட மாண்பு புலப்பட, “மகிழ்ந்த கல்யாண சுந்தரா” என்றும், மணக்கோலத்தோடும் மங்கலப் பொலிவொடும் காட்சி தருதலால் “கலியாணசுந்தரா” என்றும் இசைக்கிறார். நம்பி ஆரூரருக்குச் சுந்தரன் என்பதும் ஒரு பெயர்; அவருக்காகத திருவாரூரில் பரவையார் மனைக்குத் தூது போன எளிமைத் தன்மையை வியந்து “சுந்தரன் தூதா” எனப் புகல்கின்றார். சுந்தரர் முற்பிறப்பில் கயிலையில் சிவபிரான் கட்டளைப்படி கடல் விடத்தைக் கையிற் கொணர்ந்து தந்தவர் என்பது நினைவிற் றோன்றுதலின், அவ்விடத்தால் சிவன் திருக்கழுத்து கறை கொண்டதை விதந்து, “மைப்பொதி மிடற்றாய்” என்று பரவுகின்றார். திருவளர் முல்லைவாயில் என்று இயைக்க வளம் பலவும் ஒருசேரக் குறித்தற்குப் பொதுப்பட, “வளர்திரு முல்லை வாயிலாய்” என்றார் என்றுமாம். எல்லாவுயிர்க்கும் அப்பனாம் முறைமையை எண்ணி, “அப்பனே” என்று இயம்புகின்றார். அன்பு மொழி வழங்கி ஏற்கினும் ஏலா தொழியினும் விடுவேனல்லேன் என்பார், “உன்னை விடுவனோ” என்றும், அதற்கு அப் பெருமானுடைய திருவடியை இடையறாது மனத்தின்கண் உடையேன் என்பாராய், “அடியேன்” என்றும் முறையிடுகின்றார். திருவருள் ஞானமாகிய மெய்யறிவில்லார் சிவவழிபாடு செய்தலின் நிரம்பிய பயன் உளதாகாது என்ற கருத்துத் தோன்ற “அறிவிலேன் எனினும்” என மொழிகின்றார். எய்ப்பு - தளர்ச்சி; எய்ப்பினில் வைப்பு என்பதுபோல. வாழ்க்கையில் உண்டாகும் இடர்ப்பாடுகள் பலவற்றால் மக்கள் தளர்ச்சி யுறுவதும், அதனைப் போக்குவான் திருக்கோயிற்குச் சென்று வழிபடுவதும் இயல்பாதலின், “நின் கோயிற்கு எய்ப்புடன் வந்தால்” என்றும், அவர்பால் அருள் கூர்ந்து இனிது நோக்கி வருக என அன்பு மொழி வழங்குவது அருளாளர் இயல்பு; அதற்கு மாறான செயல் உன்பால் காணப்படுவது பொருந்தாதே என்பாராய், “வா என உரையாதிருப்பது உன் திருவருட் கியல்போ” எனவும் உரைக்கின்றார். (3)
|