657. நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
நல்லவ னேதிருத் தில்லை
மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
என்றுவந் தாய்என் றொருசொல் சொல்லா
திருப்பதுன் திருவருட் கியல்போ.
உரை: நலம் கண்டு மகிழும் நம்பனே, எப்பெற்றியோர்க்கும் நலமே புரியும் நல்லவனே, தில்லைத் திருமன்றின்கண் உவப்புடன் கூத்தாடும் வள்ளற் பெருமானே, திருமுல்லை வாயிற் பதியில் எழுந்தருளும் மாசிலாமணிக் கடவுளே, இரண்டாய் நெருங்கிய நின் திருவடியைப் பரவாதவனெனினும், தொண்டனாகிய யான் உன் கோயிற்கு வந்தடைவேனாயின், என்று வந்தாய் என்று ஒரு சொல்லும் சொல்லாதொழிவது உன் அருளுள்ளத்துக்கு இயல்பாகுமோ? கூறுக. எ.று.
நன்று - நலம்; அறச் செய்கையுமாம்; “வீழ்நாள் படாமை நன் குற்றின்” (குறள்) என்றாற் போல. நம்பன் - யாராலும் விரும்பப் படுபவன். நல்லவர், தீயவர் என்ற வேறுபாடின்றி யாவர்க்கும் இன்பம்செய்வது பற்றிச் சிவனை “யார்க்கும் நல்லவனே” என்று மொழிகின்றார். திருவை மன்றொடு கூட்டித் தில்லைத் திருமன்று உவந்தாடும் வள்ளலே என இயைத்துக் கொள்க. சிதம்பரத்தின் பழமையான பெயர் தில்லை. தில்லைக் கோயிலுள் விளங்கும் திருமன்று சிற்றம்பலம் எனப்படும்; அது பிற்காலத்தில் சிதம்பரம் என மருவி விட்டது. சொல் வரலாறறியாமையால் சிதம்பரத்தை வட சொல்லாக்கிச் சித் அம்பரம் எனப் பிரித்துச் சிதாகாசம் எனப் பொருள் கூறலாயினர். அம்மரு வழக்கு நிலை பெற்ற காலத்தே வாழ்ந்த பெருமக்கள் சிற்றம்பலத்தையும் சிதம்பரத்தையும் ஓப்பக் கொண்டு ஓம்புவாராயினர். திருக்கூத்து உயிர்கட்கு உலக வாழ்வும் ஞான வாழ்வும் வழங்குவதுபற்றி, கூத்தப்பிரானை, “வள்ளலே” எனக் குறிக்கின்றார். இரண்டாய் இணைந்து உயிர்தோறும் சென்று அறிவு செயல்களை இயக்கும் உண்மை விளங்கத் “துன்றும் நின்னடி” எனவும், அதுபற்றி அவ்வடிகள் துதித்தற்குரியவாம் என்றற்கு “அடியைத் துதித்திடேனெனினும்” எனவும் இசைக்கின்றார். துதித்தல் -வணங்குதலையும் வாழ்த்துதலையும் குறிக்கும்; இரண்டும் செய்யேன் எனினும், நெஞ்சால் நினைத்துத் தொண்டுகள் பல செய்வேன் என்பது விளங்க, “தொண்டனேன்” என உரைக்கின்றார். மனைக்கு வந்தாரை “வருக, என்று வந்தாய்” என முகமன் கூறல் உலகியல் மரபு; அது செய்யாமை அருளாளர்க்கு இயல்பன்மையின், “என்று வந்தாய் என ஒரு சொல்லும் சொல்லாதிருப்பது திருவருட்கு இயல்போ” என வினவுகின்றார். “தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பே” (கோயில்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.
இதனால், தொழுது வணங்கும் தொண்டரை என்று வந்தாயெனக் கேட்டு ஊக்குதல் வேண்டும் என்பதாம். (5)
|