658.

     பண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
          வாயில்வாழ் மாசிலா மணியே
     பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
          பெருமநின் அருள்பெற லாம்என்
     றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
          இருப்பதுன் திருவருட் கியல்போ.

உரை:

     பண்ணுக்கு முதலாகிய இசையாய் உள்ளவனே, பாலின் உள்ளூறு சுவையாகியவனே, அன்பர்கட்கு அருள் செய்யும் பரம் பொருளே, “மண்ணுலகில் உயர்ந்து வளம் பல பெறும் திருமுல்லைவாயிலையுடைய மாசிலா மணியே, பெண்டிரினும் பேதைமை பொருந்திய மதியுடையேனாயினும், பெருமானே நினது அருள் பெறலாமென்ற கருத்தால் வந்தால், என் முறையீட்டைக் கேட்பதின்றி வாளா இருப்பது உன் திருவருட்கு இயல்பாகாதே, காண்க. எ.று.

     பண்ணுக்கு முதல் இசையாதல் பற்றிப் “பண்ணினுள் இசையே” என்று கூறுகின்றார். பண்ணுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைக் கண்ட புலவர், “மூலாதாரம் தொடங்கிய எழுத்தின் நாதம், ஆளத்தியாய்ப் பின் இசையென்றும் பண்ணென்றும் பெயராம்” என்று கூறுதல் காண்க. எழுத்தோசை தம்மிற்றொடரப் பிறப்பது ஆளத்தி; அது பாவோடு அணையுமிடத்து இசையாகும்; நெஞ்சு கழுத்து முதலிய எட்டிடங்களில் தோய்ந்து நிறம் பெற்று எடுத்தல் படுத்தல் முதலிய செயல்வகையாற் பண்ணப்படுவது பண் என்பர் (சிலப். 3; 36. உரை). பாலின்கண் உளதாகிய சுவையைப் “பாலினுட் சுவை” என மொழிகின்றார். அதுவும் உள்ளத்தாற் சுவைத்துக் காணப்படுவது பற்றிப் “பாலின் உட்சுவையே” என உரைக்கின்றார். பக்தர்கள், சிவஞானத்தன்பர்கள். அவர்கள் ஞான நாட்டம் கொண்டு சிவத்தை வழிபட்டுத் திருவருள் பெறுபவராதலின், “பத்தர்கட் கருள் செயும் பரமே” எனப் பகர்கின்றார். மண்பரந்த நாட்டில் பல்வகை வளத்தால் ஓங்குவது கண்டு “மண்ணினில் ஓங்கி வளம் பெறும் முல்லைவாயில்” என உவந்துரைக்கின்றார். “நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே” என்பராதலின், “பெண்ணினும் பேதை மதியினேன்” என உறழ்ந்து கூறுகின்றார். பேதைமையுடையனாயினும் நினது பெருந்தன்மையைக் கண்டுணர்தலின், நின்னை அடைந்தால் அருள்பெறலாம் என்ற எண்ணத்தால் வந்துள்ளேன் என்பாராய், “பெரும நின் அருள் பெறலாம் என்று எண்ணி வந்தடைந்தால்” என்றும், என் முறையீட்டைக் கேளாது புறக்கணிப்பது நின் அருளுள்ளத்துக்காகாது காண் என்பாராய், “கேள்வியில்லாமல் இருப்பது உன் திருவருட்கு இயல்போ” என்றும் தெரிவிக்கின்றார்.

     இதனால், அருள் வேண்டி வந்தார்க்கு ஒரு குறிப்பும் தாராதொழிதல் கூடாது என்பதாம்.

     (6)