659.

     முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
          முக்கணா மூவர்க்கும் முதல்வா
     மன்னிய கருணை வாரியே முல்லை
          வாயில்வாழ் மாசிலா மணியே
     அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
          அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
     என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
          திருப்பதுன் திருவருட் கியல்போ.

உரை:

     முன்னுற வைக்கப்படுகின்ற வேத முடிவாகிய வேதாந்த நூல்களின் உள்ளுறு பொருளே, மூன்று கண்களையுடையவனே, பிரமன் முதலிய மூவர்க்கும் முதல்வனே, நிலைபெற்ற கருணைக்கடலே, திருமுல்லைவாயிற் பதியில் எழுந்தருள்கின்ற மாசிலாமணிக் கடவுளே,நான் உனக்கு அன்னியனாகாது தொண்டனாய் உள்ளேன், அருட்பெரும் நிலையமாகிய உன்னுடைய திருக்கோயிற்கு வந்தால், சிவனே, எளியேனாகிய என்னைப் பகைவரைப்போலப் பார்த்தொதுக்குவது உன் திருவருட்கு ஏற்புடைத்தாகாது. எ.று.

     ஞான நூல்கள் பலவற்றினும் முன்னையதாக மதித்துப் போற்றப் படுவது பற்றி வேதம், “முன்னிய மறை” என்றும், வேதாந்தமாகிய உப நிடதங்களின் நுண் பொருளாதல் பற்றி “மறையின் முடிவின் உட்பொருளே” என்றும் கூறுகின்றார். வேதாந்தத்தின் நுண்பொருள் சைவமாதலை, “ஓரும் வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த சாரம் கொண்ட சைவ சித்தாந்தம்” எனக் குமரகுருபர சுவாமிகள் குறிப்பது ஈண்டு நினைவு கொள்ளத் தக்கது. முகக்கண் இரண்டுடன் நுதற்கண் ஒன்று கூடக் கண் மூன்றாதல் பற்றி “முக்கணா” என்றும், பிரமன், திருமால், உருத்திரன் மூவர்க்கும் முதற் பொருளாதல் விளங்க, “மூவர்க்கும் முதல்வா” என்றும் மொழிகின்றார். “விரை மலரோன் செங்கண்மால் ஈசனென்றும் மூவராய முதல் ஒருவன்” (முதுகுன்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. “கடைபடா வண்ணம் காத் தெனை யாண்ட கடவுளே கருணை மாகடலே” (பிடித்த) என்று மணிவாசகர் மொழிதலின், “கருணை வாரியே” என்றும், குறைதலும் பெருகுதலுமின்றி எக்காலத்தும் ஒரு தன்மைத்தாய் நிலை பெறுவது குறித்து “மன்னிய” என்றும் புகல்கின்றார். மெய்ம்மைச் சிவத் தொண்டர்களும் ஒருவன் என வற்புறுத் துரைக்கின்றாராதலின், “அன்னிய னல்லேன் தொண்டனேன்” என்று தொடர்பு காட்டி, அருள் நிலையமாகிய நின் திருக்கோயில் வந்துளேன் என்பாராய், “உன்றன் அருட் பெருங்கோயில் வந்தடைந்தால்” என உரைக்கின்றார். விருப்புக் குறிப்புப் புலப்படாமை கண்டு வருந்து முறையிடலுற்று, “என் இது” என வியந்து, “பகைவரைப் போல் பார்த்து இருப்பது” அருட் செயலன்றே என மனம் நொந்து, ”உன் திருவருட்கியல்போ” எனச் சொல்லுகின்றார். ஆராமை மிகுதி தோன்ற “சிவனே” எனச் செப்புகின்றார்.

     இதனால், பகைவரைப் பார்ப்பது போல் எம்மைப் புறக்கணித்துப் பார்ப்பது வேண்டா என்பதாம்.

     (7)