66. மண்ணீ ரனல்வளி வானாகி நின்றருள்
வத்து வென்றே
தெண்ணீர் மையாற் புகழ் மாலயனே முதல்
தேவர்கடம்
கண்ணீர் துடைத்தருள் கற்பகமே யுனைக்
கண்டு கொண்டேன்
தண்ணீர் பொழிற்கண் மதிவந் துலாவும்
தணிகையிலே.
உரை: குளிர்ந்த தன்மை பொருந்திய சோலைகளில் திங்கள் வந்து தவழும் தணிகை மலையில் நிலம், நீர், தீ, காற்று, விண் என் ஐந்துமாகிய பரம்பொருளே என்று தெளிந்த ஞானத்தால் புகழ்கின்ற திருமால் பிரமன் முதலாய தேவர்கட்குற்ற இடுக்கண் போக்கியருளிய கற்பகமாகிய உன்னைக் கண்டு கொண்டேன்; அதனால் இனி எனக்குக் குறையேதும் இல்லை, எ. று.
சிவபெருமானைப் பரவிப் பாடும் திருஞான சம்பந்தர் முதலியோர் “நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்” (புத்தூர்) எனப் புகன்றுரைப்பதால், “மண்ணீரனல் வளிவானாகி நின்ற வத்து என்றே தெண்ணீர்மையாற்” புகழ்கின்றனர் என்று கூறுகிறார். வஸ்து என்னும் வடசொல் வத்து என வந்தது. பரம்பொருளை வடநூலார் பரவஸ்து என்பர். தெண்ணீர்மை, தெளிந்த நீர்மை; அஃதாவது ஞானம். ஞானநூற் கருத்துக்களைச் சொல்லித் துதிப்பது ஞானத்தால் தொழுதலாம். “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்” (தனி. குறுந்) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. இடுக்கணுற்ற போது மனம் கலங்கக் கண்ணீர் சொரியுமாதலால், காரணமாகிய இடுக்கண் நீக்கிய வழிக் காரியமாகிய கண்ணீர் துடைக்கப்படுவது பற்றி, “தேவர்கள் தம் கண்ணீர் துடைத்தருள் கற்பகமே” என இயம்புகின்றார். வானளாவ வுயர்ந்து இருள்படத் தழைத்த பொழிலிடம் குளிர்ச்சியுறுதலின் “தண்ணீர் பொழில்” எனவும், மதி மண்டலம் வரை உயர்ந்துள்ளமை புலப்பட, “மதி வந்துலாவும்” எனவும் இசைக்கின்றார். உயர்ந்தோரைக் கண்டு பணியும் செயலை, “கண்டு கொளல்” என்பது வழக்காதலால், முருகப்பெருமானைக் கண்டு பணிந்ததை, “கண்டு கொண்டேன்” எனக் கூறுகின்றார்.
இதனால் முருகப் பெருமானைத் திருத்தணிகையிற் கண்டு கொண்டமை கூறியவாறு. (66)
|