660.

     நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
          ஞானநா டகம்புரி நலமே
     வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
          வாயில்வாழ் மாசிலா மணியே
     புல்லவன் எனினும் அடியேனன் ஐயா
          பொய்யல உலகறிந் ததுநீ
     இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
          இருப்பதுன் திருவருட் கியல்போ.

உரை:

     நற்பண்புடையோர் பெறுகின்ற நல்ல செல்வமாகியவனே, தில்லை மன்றில் ஞான நாடகத்தை ஆடுகின்ற நலப் பொருளே, அறிவு ஆற்றலில் வல்லவர் நன்கு மதிக்கும் தெய்வமே, திருமுல்லை வாயிற் பதியில் எழுந்தருளும் மாசிலாமணிக் கடவுளே, புல்லியேன் என்றாலும் யான் உனக்கு அடியவன் என்பது உலகறிந்தது; இது பொய்யுரையன்று; நீ அதனை இல்லையென மறுத்தாலும் யான் விடமாட்டேன்; நீ அருளாது சும்மா இருப்பது உனது அருட் பண்புக்கு அமைவதன்று. எ.று.

     நல்லவர் - நற்குண நற்செய்கை யுடையோர். குணம் செய்கைகளின் நன்மையால் எய்தப்படும் நலங்களைச் செல்வமென்று கொண்டு “நல்லவர் பெறும் நற்செல்வமே” என்று இசைக்கின்றார். பிறந்து வாழும் உயிர்களை இயக்கும் ஊன நாடகமேயன்றி, மன்றின்கண் ஆடும் திருக் கூத்தால் உயிர்கட்கு ஞானம் எய்துவிக்கும் திறம் வியந்து “மன்றுள் ஞான நாடகம் புரி நலமே” எனக் கூறுகின்றார். “மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம் சாய வமுக்கியருள் தான் எடுத்து நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம் தான்” என உண்மை விளக்கம் உரைப்பது காண்க. வல்லவர் - வல்லமையுடையவர். அறிவாற்றலால் தெய்வங்களையும் ஏவல் கொளும் செயன்மை ஈண்டு வல்லமை எனப் படுகிறது. அத்தகை யோரும் தம்மினும் வன்மையும் தலைமையும் மிகவுடைமை பற்றி நன்கு மதிக்கும் சிறப்புப் பற்றிச் சிவபிரானை, “வல்லவர் மதிக்கும் தெய்வமே” என்று புகழ்கின்றார். புல்லவன் - புல்லறிவாளன்; அற்பன் என்றுமாம். புல்லி யோனாயினும் சிவனுக்கும் அவனுடைய அடியார்கட்கும் அடித்தொண்டு புரியும் தொடர்புடைமை விளம்புவார், “புல்லவன் எனினும் அடியனேன்” என்றும், அது பொய்யன்று, உலகறிந்த செய்தி என வற்புறுத்தற்கு, “ஐயா, பொய்யல உலகறிந்தது” என்றும் உரைக்கின்றார். உலகுரையை யேலாது நீ மறுத்தாலும் யான் ஒருபோதும் விடேன் என்பாராய், “நீ இல்லை யென்றாலும் விடுவனோ” என்றும், அருள் புரியாதிருப்பது நன்றன்று என்பாராய், ”சும்மா இருப்பது உன் திருவருட் கியல்போ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், யான் அடியனாகலின் என்னைக் கண்டு சும்மா இருப்பது பொருந்தாது என்பதாம்.

     (8)