661.

     பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
          புண்ணியம் விளைகின்ற புலமே
     மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
          வாயில்வாழ் மாசிலா மணியே
     புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
          பூங்கழற் கன்புபூண் டவன்காண்
     எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
          இருப்பதுன் திருவருட் கியல்போ.

உரை:

     மன்றின்கண் நின்று கூத்தாடி யருளும் ஒப்புயர் வில்லாத முதற் பொருளாயவனே, புண்ணியமாகிய நெல் விளைகின்ற நன்செய் என விளங்குபவனே, தேன் மிக்குச் சொரிதலால் உயர்வுபெறும் சோலைகளை யுடைய திருமுல்லைவாயிலில் கோயில் கொண்டருளுகின்ற மாசிலாமணிப் பெருமானே, யான் நினக்குப் புதியவனல்ல; பண்டிருந்தே உனது பூப்போலும் திருவடிக்கண் அன்பு செய்கிறவன்; அப் பெற்றியனாகிய என்னை நோக்கி, யாது வேண்டி என்பால் வந்தாய் என்றேனும் கேளாமல், வாய்வாளா திருப்பது உன் சிறந்த, அருள்நெறிக்கு ஒத்த தாகுமோ? எ.று.

     பொது - தில்லையில் உள்ள மன்றுக்குப் பெயர். “நலமலி தில்லையுள் கோலமார் தரு பொதுவினில் வருக என” (கீர்த்தி. 127-8) எனத் திருவாசகம் கூறுவது காண்க. மன்றின்கண் நின்றாடுதல் பற்றி, “நின்றருளும்” என்று குறிக்கின்றார். தனி முதற் பொருள் என மாறுக. தனிமை - ஈண்டு ஒப்புயர்வில்லாமை. சிவன்பாற் செய்யப்படும் புண்ணியம் மேன்மேற் பெருகுமென்பது பற்றி, “புண்ணியம் விளைகின்ற புலம்” என்று புகல்கின்றார். “எல்லையில்லாப் புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்” (கண்ணப்) என்று சேக்கிழார் உணர்த்துவதறிக. குறிப்புருவகம். மதுவின் என்றவிடத்து இன்னுருபு ஏதுப் பொருட்டு. காற்றும் மழையும் பிறவும் செய்யும் தீங்குகளாற் குறைவுறாது நிலை பெற்றிருக்கும் நலம் பற்றி, “நின்றோங்கும் பொழில்” என நினைந்துரைக்கின்றார். பழமையான அடியார் இனத்தவன் என்பது புலப்பட, “புதுமையனல்லேன்” தொன்று தொட்டுனது பூங்கழற் கன்பு பூண்டவன் காண்” என்று விளம்புகின்றார். பழமைக்குப் பெருமையும் புதுமைக்குப் புன்மையும் கற்பிக்கும் உலகியல் பற்றி, “புதுமைய னல்லேன்” என்றும், “தொன்று தொட்டு அன்பு பூண்டவன்” என்றும் சொல்லுகின்றார், “பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர், புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ” என்று மணிவாசகனார் உரைப்பது கொண்டு அறிக. வேண்டுவதொன்றை நினைந்து வந்தமை விளங்க, “எது நினைந்தடைந்தாய்” என்றும், வாய் திறந்து ஒன்றும் வினவாமல் இருப்பதை, ”கேளாமல் இருப்பது” என்றும் சொல்லுகின்றார்.

     இதனால், திருமுன் வந்த என்னை நோக்கி எது நினைந்து வந்தாய் என்றேனும் கேட்டல் நன்றென்பதாம்.

     (9)