662. பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
புண்ணியா கண்ணுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
உன்திரு அடித்துணை அறிய
என்னைஈன் றவனே முகமறி யார்போல்
இருப்பதுன் திருவருட் கியல்போ.
உரை: திருமகளைக் கொண்ட திருமாலும் பிரமனும் நேர் நின்று அறியமாட்டாத புண்ணிய மூர்த்தியே, கண் பொருந்திய நெற்றியையுடைய கரும்பு போல்பவனே, மன்னவனே, மருந்தே, திருவளரும் முல்லைவாயிலில் எழுந்தருளும் மாசிலாமணிக் கடவுளே, உன் திருவடி சான்றாக, உன்னை நான் கனவின்கண்ணும் பாராதிருத்தல் இல்லேன்; எனக்குத் தாய் போன்றவனே, என்னை வேற்றவர் போலப் பாராமல் இருப்பது அருளாளனாகிய உனக்கு இயல்பாகாது; காண். எ.று.
பொன், திருமகள். இதனால் திருமகளைப் ‘பொன் மகள்’ என்பது வழக்காகவுளது. அறிவும் ஆற்றலும் செறியக் கொண்டு சிவனைக் காண்பதென்பது இயலாச் செயலாகும் என்பது புலப்பட, “நின்னறியாப் புண்ணியர்” என்று புகல்கின்றார். அறிவு மறைப்புண்டு அகந்தையுற்று அல்லன செய்வதுண்மையின் அரிபிரமர்கட்கு அறிய வொண்ணாமை விளங்க, “நின்றறியாப் புண்ணியா” என்பாராயினர். எல்லையின்றிப் பெருகும் புண்ணியமாதலின் நின்றறியாப் புண்ணியர் எனல் பொருத்தமாயிற்று. நெற்றியிற் கண்ணுடையனாய் நினைப்பவர் நெஞ்சினுள் தோன்றி நிற்குமாறு பற்றிக் “கண்ணுதற் கரும்பே” என்று கட்டுரைக்கின்றார். ஆதியந்த மின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மை மயனாதலின், “மன்னன்” என்றும், பிறவி நோய்க்கு மருந்தாதலால் “மருந்தே” என்றும் வள்ளலார் உரைத்தருளுகின்றார். நனவின்கண் இடையறவின்றிச் சிவனை நினைந்தவண்ணம் இருப்பதுபற்றிக் கனவின் கண் மறைத்தற்கு ஏதுவின்மையால் “உன்னை நான் கனவினிடத்தும் விட்டொழியேன்” என்றும், இதற்கு உன் திருவடித் துணையே சான்று என்று தோன்ற, “உன் திருவடித் துணையறிய” என்றும் இசைக்கின்றார், நனவின்கண் நிகழ்வது கனவின்கண் தோற்றம் தரும் என்பது தமிழ்ச் சான்றோர் துணிவு. எங்கும் எப்பொருளினும் தோய்ந்து நிலவும் நீர்மை யுடையதாகலின், இறைவன் திருவடியைச் சான்றாக்கித் “திருவடித் துணையறிய” என எடுத்துரைக்கின்றார் வடலூர் வள்ளற்பிரான். பெற்ற தாய்போல் அன்பும் ஆற்றலும் தந்து அறிவருளும் பெருந்தன்மைபற்றி “என்னை ஈன்றவனே” என்று கூறுகின்றார். இதற்கு முன் கண்டிராத வேற்றவரை “முகமறியார்” என்பது உலகியல் வழக்கு.
இதனால், என்னை அயலார் போல நோக்குதல் கூடாதென்பதாம். (10)
|