10. திருமுல்லை வாயில்
திருவிண்ணப்பம்
வடலூர்
வள்ளல் வட திருமுல்லை வாயிற் பதியில் கோயில் கொண்டருளும் மாசிலாமணிப் பெருமானைப்
பத்துத் திருப்பாட்டுக்களால் விண்ணப்ப முறையில் பரவுகின்றார். சென்னைத்
திருவொற்றியூர்க்கண் இருந்து சிவவழிபாடு செய்து வருகையில் வடதிருமுல்லைவாயிற்குச் சென்று
மாசிலாமணி யீசனை வழிபட அன்பு கொள்கின்றார்; தொடக்கத்தே அந்த அன்பு மேலும் பெருகி அவரை
அப்பதி நோக்கிப் பறப்பட உந்தாமையின் மனைக்கண்ணே இருந்தொழிகின்றார்; நாளடைவில் அன்பு
ஆர்வமாகி அவரது ஆருயிரைப்பற்றி முல்லைவாயிற்குச் செல்லுமாறு உந்துகிறது. அன்பர் சிலருடன்
முல்லைவாயிற் பதிக்குச் செல்கின்றார். பதியின் எல்லையை அடைந்ததும், இதனை வந்தடைய
எளியேன் எத்தவம் செய்தேனோ எனத் தம்மை வியந்து மகிழ்கின்றார்; பின்பு திருக்கோயிலை
நெருங்கிக் காண்கின்றார். புறக் கண்ணேயன்றி அகக்கண் மாசிலாமணிக் கடவுளை மனத்தின்கண்
இருத்துகிறது; திருக்கோயிலை அனபருடன் வலம் வந்து முற்றத்தே நின்று மகிழ்கின்றார். அதற்கு
ஏதுவாகிய தவத்தை நினைந்து இன்புறுகின்றார். அப் பதியின்கண் சின்னாள் உறுதற்குச் சிந்தை
கொள்கிறார். உறுவதால் உள்ளம் சிறக்குமெனக் கருதுகின்றார். எண்ணம் எண்ணி யாங்குக் கைகூட
வாய்ப்பின்மையின் உறுவது எவ்வண்ணம் என இறைவனுடன் உசாவுகின்றார். முன்பே போந்து
முல்லைவாயிற் பரமன் புகழ் பேசாத குறையை நினைந்து வருந்துகின்றார். உடன் வந்த அன்பர்கள்
ஊரவரால் ஏதிலார்போல நோக்கப்படுகின்றார்கள். இவ் வுரைப்பணியைத் தொடங்குதற்குமுன்
நண்பர் சூழ நாங்கள் திருமுல்லைவாயிற் பரமனை வழிபடச் சென்ற காலை நாங்களும் வள்ளலார்
குறிப்பது போலப் புறக்கணிக்கப்பட்டோம். வள்ளற்பிரான் உடன்சென்ற அன்பர்கள் மனம்
கலக்கமுறுகின்றார்கள்; சிலர் துன்புறுகின்றார்கள். சிலர் இகழப்பட்டாரேனும் முடிவில் நன்கு
போற்றப்படுகிறார்கள். அதற்குக் காரணமாயிருந்த திருவருள் இப் பத்தின்கண்
வாழ்த்தப்படுகிறது.
கலி விருத்தம் 663. தாயின் மேவிய தற்பர மேமுல்லை
வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
தேயின் மேவி இருந்தனன் என்னையே.
உரை: தாய்போல் அன்பு பொருந்திய தற்பர சிவமே. திருமுல்லை வாயிலில் எழுந்தருளுகின்ற மாசிலாமணியே, உனது கோயிலிடத்தே போந்து நின் தாமரை மலர் போலும் திருவடியைத் தொழாமல் இல்லின் கண்ணே இருந்தொழிந்தேன்; என் செயல் இருந்தவாறு என்னை? எ.று.
உயிர்கட்குத் தாயாகித் தலையளிக்கும் தனிப்பரம்பொருளாதலால் “தாயின் மேவிய தற்பரம்” என்கின்றார். திருமுல்லைவாயிற் பதியில் அப்பெருமானை மாசிலாமணி என்று சொல்லித் துதிக்கு மரபு பற்றி “முல்லைவாயில் மேவிய மாமணியே” என்று குறிக்கின்றார். மாமணி, தூயமணி; அஃதாவது மாசிலாமணி. மலர்களில் தலையாயது தாமரையாவதால், அது “கோமலர்” எனப்படுகிறது, கோமலர் போலும் தாளைத் தொழுது வணங்குவது கடமையாகவும், அதை நினைத்துக் கொண்டிருந்தேனெனினும் கையாற் றொழுது மெய்யால் வணங்கினே னில்லை; மலையின்கண் வாளா இருந்தொழிந்தேன் என்பாராய், “மலர்த்தாள் தொழாதே இல்மேவி இருந்தனன்” என்றும், இதற்கேதுவாகிய அன்பின்மையை என்னென்பது என்றற்கு “என்னையே” என்றும் இசைக்கின்றார்.
இதனால், திருமுல்லைவாயிற்குச் செல்லாமல் மனையிடத்தே அன்பின்றி மடிந்து கிடந்தேன் என்றாராயிற்று. (1)
|